கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டிடத்தின் மூலைக்கல் ஆயிற்று
திருப்பாடல் 118: 1 – 2, 4, 22 – 24, 25 – 27a, (22)
ஒரு கட்டிடத்தை ஒன்றிணைக்கக்கூடியதாக இருப்பது மூலைக்கல். அந்த கட்டிடத்திற்கு அடித்தளமாக இருப்பது இந்த மூலைக்கல் தான். எசாயா 28: 16 சொல்கிறது: ”சீயோனில் நான் ஓர் அடிக்கல் நாட்டுகின்றேன். அது பரிசோதிக்கப்பட்ட கல். விலையுயர்ந்த மூலைக்கல். உறுதியான அடித்தளமாய் அமையும் கல்”. இங்கே ”மூலைக்கல்” என்கிற வார்த்தை நமக்கு தரக்கூடிய பொருள், இது ஒரு கட்டிடத்தின் முக்கியமான கல் என்பதாகும். இஸ்ரயேல் மக்கள் தான், இந்த உலகத்தின் மூலைக்கல் என்று கடவுள் சொல்கிறார். ஏனென்றால், வலிமை வாய்ந்த அரசுகள் இருந்த காலக்கட்டத்தில், இஸ்ரயேல் மக்கள் சாதாரணமானவர்களாக இருந்தனர். இந்த உலகத்தின் பார்வையில் சாதாரண கல்லாகக் கிடந்தனர். ஆனால், கடவுள் அவர்களை அடிப்படையாக வைத்துதான், மீட்பின் திட்டத்தை தயாரிக்கிறார். அவர்கள் வழியாகத்தான் மீட்பைக் கொண்டு வர முடிவு செய்கிறார். இந்த திருப்பாடல் ஓர் உருவகமாக நமக்கு தரப்பட்டுள்ளது. தாவீதின் வாழ்க்கை அனுபவத்தையும் இது ஒப்பிட்டுப் பேசுவதாக இருக்கிறது. தாவீது சாதாரண மனிதர் தான். அவருடைய அருட்பொழிவு நேரத்தில், மற்ற பிள்ளைகளையெல்லாம் பெருமையோடு சொன்ன அவருடைய தந்தை, தாவீதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. ஆனால், கடவுள் அவரைத்தான் தேர்ந்தெடுத்தார். இயேசுவின் சீடர்கள் படித்தவர்களில்லை. சாதாரண பாமரரர்கள். ஆனால், அவர்கள் வழியாகத்தான் கடவுள், இந்த உலகம் முழுமைக்கும் நற்செய்தி அறிவித்தார்.
நமது வாழ்க்கையிலும், இதனை நாம் முழுவதுமாக உணரலாம். பார்வை இல்லாதவா்கள், காதுகேளாதவர்கள், மாற்றுத்திறனாளிகள் தான் இன்றைக்கு, அதிக அளவில் சாதித்துக்கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நம்மைப் பற்றி எப்போதும் தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல், கடவுள் பார்வையில் நாம் உயர்ந்த மதிப்பு பெற்றவர்கள் என்கிற எண்ணத்தை நாம் நம்முள் விதைத்துக்கொள்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்