கடைக்கண் பார்வை
மத்தேயு 6 :8 “நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்”. நம்மை, நம் தேவையை, நம் குறைகளை, நம்மைப்பற்றிய விவரங்கள் அனைத்தும் அறிவார். “நீ இருப்பதும் போவதும் வருவதும் எனக்குத் தெரியும்”( 2 அரசர்கள் 19 :27) இதுதான் நம் தெய்வம். “இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு, “அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்” என்று கூறி, தம் கைகளை அவர் மீது வைத்தார்.”
அந்த பெண் எதுவும் கேட்கவில்லை.கேட்பதற்கு முன் அவளது தேவையை இயேசு அறிவார். இந்த நோயிலும் வேதனையிலும் பதினெட்டு ஆண்டுகள் கடும் பாடுகள்பட்டபோதிலும் இயேசு போதிப்பதைக் கேட்க தொழுகைக்கூடம் வந்திருக்கும் அப்பெண்ணின் மனதையும் தெய்வ பக்தியையும் அவளது விசுவாச வாழ்வையும் அவர் அறிவார். எனவே தம் கையை அவள்மீது வைக்கிறார்.குணப்படுத்துகிறார்.
நம்மையும் நம் இயேசு அறிவார். நம் தேவைகளை அறிவார். நாம் கேட்பதற்கு முன் நமக்கு தருவார். ஒரு சிலவற்றை அப்பெண் செய்ததுபோல நாமும் செய்ய வேண்டும். பல ஆண்டுகள் வேதனை, சோதனை மத்தியில் நிலைகுலையாத நம்பிக்கை வேண்டும். எத்தகைய உடல் நலக்குறைவுடனும் ஆண்டவன் ஆலயம் வந்து அவரிடம் கற்றுக்கொள்ள வரவேண்டும். அவரது கடைக்கண் பார்வை பெற நம்மையும் நம் வாழ்வையும் அமைத்துக்கொள்ள வேண்டும். எல்லா சூழ்நிலையிலும் கடவுளைப் போற்றிப் புகழும் பண்பு வேண்டும்.
ஆம். நம் தெய்வம் நம்மைக் கண்டு, நம் அருகில் வந்து நம்மைத் தொட்டு நம் தேவைகளை நிறைவு செய்வார். முயன்று பார்ப்போமா!
~அருட்திரு ஜோசப் லீயோன்