கடின உள்ளமும், மண விலக்கும் !
மணவாழ்வு ஒரு மிகப் பெரிய சவால் என்பதை நாம் அறிவோம். மணவிலக்குகள் பெருகி வரும் இக்காலத்தில் மணவாழ்வின் ஒற்றுமைக்காக செபிக்கவும், முயற்சிகள் எடுக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம். மோசேயின் அனுமதியைப் பற்றி பரிசேயர் இயேசுவிடம் வினவியபோது உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே மோசே இவ்வாறு எழுதிவைத்தார் என்கிறார் இயேசு. மணவிலக்கு, மண முறிவு என்பதெல்லாம் கடின உள்ளத்தின் வெளிப்பாடுகள். எப்போது கணவன் அல்லது மனைவியின் உள்ளம் கடினப்பட்டுவிட்டதோ, அப்போது அவர்களின் மனதில் மணமுறிவு ஏற்பட்டுவிடுகிறது. அம்மன முறிவின் வெளிப்பாடே மணவிலக்கு. எனவே, தம்பதியர் தங்கள் உள்ளம் கடினப்பட்டுப் போகாமல் காத்துக்கொள்ளவேண்டும்.
தன்னலம் என்பது கடின உள்ளத்தின் ஓர் அடையாளம். புரிந்துகொள்ளாமை, ஏற்றுக்கொள்ளாமை, மன்னிக்காமை, பாசம் கொள்ளாமை, நல்லதைப் பாராட்டாமை … இவை அனைத்துமே கடின உள்ளத்தின் வெளிப்பாடுகள்தாம். இத்தகையோர் மனதில் ஏற்கனவே மணமுறிவு ஏற்பட்டுவிட்டது என்றே கூறலாம். கல்லான இதயத்தை எடுத்துவிட்டு, கனிவான இதயத்தைப் பெற நாம் இறைவனிடம் இறைஞ்சுவோம். அவ்வாறே, கணவன் மனைவி இருவரும் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டு, மன்னித்து, பாசம் காட்டி, பாராட்டி வாழ்ந்தால் இல்லறம் இனிமையாய் இருக்கும்.
மன்றாடுவோம்:
மணவாழ்வின் நாயகனே. இறைவா, உம்மைப் போற்றுகிறோம். தம்பதியரின் மணவாழ்வு அன்பு மணம் வீச உம்மை மன்றாடுகிறோம். நீரே அவர்களின் கடின இதயத்தை மாற்றி, கனிவான இதயமாக மாற்றுவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
–அருள்தந்தை குமார்ராஜா