கடவுள் விரும்பும் வாழ்வு
வெளிவேடக்காரர் என்கிற வார்த்தை, சாதாரண வார்த்தையல்ல. அது ஒரு கடினமான வார்த்தை. அது ஒரு மனிதருக்கு இழுக்கு தரும் வார்த்தை. ஒருவரை அவமானப்படுத்தும் வார்த்தை. ஒருவருடைய ஆளுமையைச் சிதைக்கும் வார்த்தை. இப்படிப்பட்ட வார்த்தை, இயேசுவின் வாயிலிருந்து வந்தால், எந்த அளவுக்கு பரிசேயர்களும், சதுசேயர்களும் மோசமான வாழ்க்கை வாழ்ந்திருப்பார்கள் என்பதை, நாம் உணர்ந்து கொள்ளலாம்.
பரிசேயர்களும், சதுசேயர்களும் வெளியில் நல்லவர் போல நடித்துக்கொண்டிருந்தார்கள். இதிலிருந்து நல்லது எது? தீயது எது? என்பதை, அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. அவர்கள் வெளியில் அனைவராலும் நல்லவர்களாக நடிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு தாங்கள் வாழக்கூடிய வாழ்க்கை தெரியாமல் இல்லை. தாங்கள் இருவகையான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதனை மற்றவர்கள் சொல்லி, அவர்கள் அறிய வேண்டியதில்லை. ஏனெனில், அவர்களே அறிந்திருக்கிறார்கள். ஆனாலும், அவர்களது வாழ்வில் திருந்தி வாழ வேண்டும் என்கிற எண்ணம் வரவேயில்லை. இதுதான் இயேசுவின் வேதனைக்கு காரணமாகிறது.
நமது வாழ்வை நாம் மாற்றாதபோது, நம்மை விட, கடவுள் அதிகமாக வருத்தம் கொள்கிறார். நமது நிலையை எண்ணி அவர் வருத்தப்படுகிறார். நாம் செல்லக்கூடிய பாதை அழிவுக்குரியது என்று அவர் வேதனையுறுகிறார். இத்தகைய கடின உள்ளத்தினராய் வாழ்ந்த, பரிசேயர்களைப் போல நாம் வாழாது, நமது வாழ்வை நாம் மற்றுவோம். கடவுள் விரும்புகிற வகையில், வடிவத்தில் நாம் வாழ்வோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்