கடவுள் விரும்பும் திறந்த உள்ளம்
மருத்துவரை யார் தேடுவார்கள்? எப்போது தேடுவார்கள்? நோய்வாய்ப்பட்டிருக்கிற அல்லது தான் பாதிக்கப்பட்டிருக்கிறோமோ என்று நினைக்கிற ஒருவர் தான் மருத்துவரை நாடுவார். அதுவரை யாரும் மருத்துவரை நினைத்துக் கொண்டிருப்பதில்லை. தேவை எழுகிறபோது மருத்துவரின் உதவியை ஒருவா் நாடுகிறார். தன்னை நோயாளி என்று கருதாத, நினைக்காத, நம்பாத யாரும் மருத்துவரை தேடுவது கிடையாது. இதுதான் பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்களின் வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருந்தது. அவர்கள் தங்களை தூய்மையானவர்களாக, புனிதமானவர்களாக கருதிக்கொண்டிருந்தனர். கடவுளின் இரக்கம் தங்களுக்கு தேவையில்லை என்ற எண்ணம் கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட எண்ணம் கொண்டிருக்கிறவர்களுக்கு இந்த உவமையை இயேசு சொல்கிறார்.
இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இரண்டு பேரும் வேறுபாடான எண்ணங்களைக் கொண்டிருக்கிறவர்கள். இன்றைக்கு இந்த சமுதாயத்திலும் ஒவ்வொருவரும் வேறுபாடான கோணத்தில் சிந்திக்கிறவர்களாகத்தான் இருக்கிறார்கள். அது நேர்மறையாக சிந்திக்கப்பட்டால் வளர்ச்சியை நோக்கியதாக இருக்கும். எதிர்மறையாகச் சிந்தித்தால் அழிவை நோக்கியதாக இருக்கும். இந்த இரண்டு பிள்ளைகளிடத்திலும் தந்தை ஒரே கோரிக்கையைத்தான் வைக்கிறார். பதில் முரண்பட்ட பதிலாக அவருக்கு கிடைக்கிறது. செயல்பாடும் முரண்பட்டதாகவே இருக்கிறது. “போகிறேன்” என்று சொல்கிற மகன் இறுதியாக போகவில்லை. ”போக மனம் இல்லை” என்று சொல்கிறவன் இறுதியில் போகிறான். இந்த மகன் தன் உள்ளத்தில் எண்ணுவதை பகிர்ந்து கொள்கிறான். அதை வெளிப்படுத்த, தந்தை என்ன நினைப்பாரோ? என்ற சிந்தனைகள் அவனுடைய உள்ளத்தில் எழவில்லை. இரண்டாவது மகன், தந்தையிடத்தில் நல்ல பிள்ளையாக நடிக்கக்கூடியவனாக இருக்கிறான். அது அவனுடைய செயலில் வெளிப்பட்டுவிடுகிறது.
கடவுள் முன்னிலையில் திறந்த உள்ளத்தினராக நாம் இருக்க வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். நமது பலவீனங்களை ஏற்றுக்கொள்கிறவர்களாக நாம் வாழ வேண்டும். அதற்கேற்ப நமது வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும். அதைத்தான் கடவுள் விரும்புகிறார். அப்போதுதான் கடவுளின் அருளும் நம்மை வந்தடையும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்