கடவுள் மாட்சி பெறட்டும்
பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறாகிய இன்று நாம் செலுத்தும் அன்பு வழியாக இறைவன் மாட்சிமை அடையவேண்டும் என்றும், அன்பிலிருந்தே பிறர் நம்மை இயேசுவின் சீடர்களாக அடையாளம் காண்பர் என்றும் இறைமொழி வழியாக அறிகின்றோம்.
இயேசு தமது இறுதி செபத்தில் இவ்வாறு செபித்தார்: “மானிட மகன் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார்”. நாம் நேர்மையோடும், அன்போடும் ஆற்றுகின்ற ஒவ்வொரு செயலிலும் இறைவன் மாட்சி அடைகின்றார். மனம் மகிழ்கின்றார்; என்பதே ஒரு நற்செய்தி அல்லவா! எனவே, நாம் எதைச் செய்தாலும், அச்செயல் வழியாக இறைவன் மாட்சி அடையவேண்டும் என்னும் மனநிலையில் பணியாற்ற வேண்டும். நமது ஒவ்வொரு அன்புச் செயலும் இறைவனை மனமகிழச் செய்கிறது என்பதை உணர்ந்தால், நமது செயல்களுக்குப் புதிய பரிமாணம் கிடைக்காதா? எனவே, நாம எதைச் செய்தாலும், கூலிக்காக செய்யாமல், ஆண்டவருக்காக செய்ய முன்வருவோமாக!
மன்றாடுவோம்: உழைப்பை மேன்மைப்படுத்தி, தந்தையை மாட்சிப்படுத்திய இயேசுவே, இறைவா, உம்மைப் போற்றுகிறோம். “தந்தை எனக்குக் கொடுத்த வேலையை செய்துமுடிப்பதே என் உணவு” என்று மொழிந்து, உரைத்தவாறே தந்தையின் பணிகளை நன்றாகச் செய்து, தந்தையை மாட்சிப்படுத்தினீரே. உமக்கு நன்றி. உம்மைப் போல நாங்களும் உழைக்க, இறைவனை மாட்சிப்படுத்த அருள்தாருமு;. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
— அருட்தந்தை குமார்ராஜா