கடவுள் நம் அனைவரின் தந்தை
யூத ராபிக்களிடையே, கடவுள் எகிப்தியர்களை செங்கடலில் மூழ்கடித்த நிகழ்வுகளைப் பற்றி ஒரு கதை ஒன்று சொல்வார்கள்: எகிப்தியர்கள் இஸ்ரயேல் மக்களைத் துரத்தி வருகிறார்கள். செங்கடலை கடந்து விட்ட, இஸ்ரயேல் மக்களை அவர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். கடல் நீர் பொங்கி எழுந்து அனைத்து எகிப்தியர்களும் மூழ்கி இறந்து போகிறார்கள். இதனைக்கண்ட வானதூதர்கள் மகிழ்ச்சியில் கடவுளைப் புகழ்ந்து பாடினார்கள். ஆனால், கடவுளோ மிகவும் சோகமாக, என்னுடைய படைப்புகள் அங்கே இறந்து கொண்டிருக்கிறது. நீங்களோ என்னை புகழ்ந்து கொண்டிருக்கிறீர்களே, என்று வேதனைப்பட்டாராம். இதுதான் கடவுளின் அன்பு. கடவுளின் அன்பை நாம் எதனோடும் ஒப்பிட்டு கூற முடியாது. அவரது அன்பு ஈடு இணையில்லாதது.
இந்த கடவுளின் அன்பை நாம் நமது மனித இயல்பில் புரிந்து கொள்ளவே முடியாது. அதனை புரிந்து கொள்வதற்கான ஆற்றல், நமது அறிவுக்கு இல்லை என்பதுதான் உண்மை. கடவுள் இந்த உலகத்தை ஒட்டுமொத்தமாக பார்க்கிறார். இந்த உலகத்தில் வாழக்கூடிய அனைவரையும் தனது பிள்ளைகளாகப் பாவிக்கிறார். நாமோ மக்களைப் பிரித்துப்பார்க்கிறோம். காரணம், கடவுளை நம் தந்தை என்று சொல்கிறோமே தவிர, அவரை தந்தையாகப் பார்க்கவில்லை. ஒருவேளை அவரை நமது தந்தையாகப் பார்த்திருந்தால், நிச்சயமாக அனைவரையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலை நம்மில் இருந்திருக்கும். இயேசு அனைவரையும் ஒட்டுமொத்தமாக பார்க்கக்கூடிய மனநிலையைப் பெற்றிருந்தார். எனவே தான், அவரால் அனைவரையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலையை வெளிப்படுத்த முடிந்தது.
நமது வாழ்விலும் நாம் மற்றவர்களை பிரித்துப் பார்க்காமல், நம்மில் ஒருவராக, நம்மோடு உறவாடக்கூடிய மனிதர்களுள் ஒருவராகப் பார்ப்போம். அப்படி பார்ப்பதுதான், நாம் கடவுளை நமது தந்தையாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையைப் பெற்றிருப்பதாக அர்த்தமாகக் கொள்ள முடியும். இல்லையென்றால், வெறுமனே கடவுளை வார்த்தைகளில் தந்தை, என்று அழைப்பவர்களாகத்தான் இருக்க முடியும்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்