கடவுள் நம்மோடு இருக்கின்றார்
திருப்பாடல் 87: 1 – 3, 4 – 5, 6 – 7
இந்த திருப்பாடல் சீயோனைப் பற்றி சொல்கிற பாடல். சீயோன் செழுமையாக, வளமையாக இருந்த நேரத்தில் ஆசிரியர் இந்த பாடலை பாடியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதேவேளையில் மற்றொரு பிண்ணனியும் ஏற்றுக்கொள்வது போல இருக்கிறது. அதன்படி, சீயோன் அதாவது எருசலேம் பகைநாட்டினரால் தகர்க்கப்பட்டபோது, எருசலேமில் இருந்தவர்கள் நாடுகடத்தப்பட்டபோது, நம்பிக்கை இழந்த சூழ்நிலை இருந்தது. நம்பிக்கையிழக்காதபடிக்கு வாழ, இந்த திருப்பாடல் அழைப்புவிடுப்பதாகவும் இது பார்க்கப்படுகிறது.
இரண்டு பிண்ணனிகளில் நமக்குச் செய்தி தரப்பட்டாலும், இரண்டு பிண்ணனியுமே ஒரே செய்தியைத்தான் தருகிறது. அதுதான் இன்றைய திருப்பாடலின் பல்லவியாகவும் வருகிறது. ”கடவுள் நம்மோடு இருக்கிறார்” என்பதுதான் அந்த செய்தி. சீயோன் வளமையாக இருந்தது என்றால், அதற்கு காரணம் கடவுள் அவர்களோடு இருக்கிறார் என்கிற நம்பிக்கை. அதேபோல, பகைநாட்டினர் அவர்களை அழித்தொழித்தபோதும், அவர்கள் கவலைப்படாதிருக்க நம்பிக்கையிழக்காதிருக்க அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது, கடவுள் நம்மோடு இருக்கிறார் என்கிற நம்பிக்கை. ஆண்டவர் அவர்களோடு இருக்கிறார் என்கிற எண்ணம் தான், அவர்களை எல்லாச்சூழ்நிலைகளிலும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உதவியாக இருந்தது.
நம்முடைய வாழ்விலும் ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் என்கிற எண்ணம் நமக்கு நம்பிக்கையைத் தர வேண்டும். எந்த தருணத்திலும் நாம் கவலை கொள்ளாத அளவுக்கு, அவருடைய பிரசன்னம் நமக்கு உந்துசக்தியாக இருக்க வேண்டும்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்