கடவுள் தரும் மீட்பு
யார் தான் மீட்புப் பெற முடியும்? என்பதுதான் இயேசுவிடம் கேட்கப்பட்ட கேள்வி. இந்த உலகத்தில் ஆன்மீகச்சிந்தனையோடு வாழும் அனைவருமே, தங்களது இலக்காகக் கொண்டிருப்பது, மீட்பு. அனைத்து மதங்களும் இந்த மீட்பைப் பற்றித்தான் வெளிப்படையாக பேசுகின்றன. மதங்களின் கோட்பாடுகளும், அனைவரும் மீட்பு பெற வேண்டும் என்கிற ஒற்றை இலக்கில் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கின்றன.
மீட்பு பெறுவது என்பது, நாம் வாழும் உலகில் எளிதானது அல்ல. மீட்பு என்பது நிலைவாழ்வைக் குறிக்கக்கூடிய சொல்லாக இருக்கிறது. இந்த உலகம் நிலையானது அல்ல என்பதுதான், பெரும்பாலான மதங்களின் கருத்தாக இருக்கிறது. அந்த நிலையான வாழ்வு நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. அந்த நிலையான வாழ்வை, நாம் பெறுவதற்கு தகுதி பெற வேண்டும். அதற்கு நாம் கடுமையாக, கடினமாக உழைக்க வேண்டும். பல தடைகளைத் தாண்ட வேண்டும். சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அதுதான் நமது இலட்சியமாக இருக்க வேண்டும்.
இன்றைக்கு வாழும் மக்கள், சவால்களை சந்திப்பதற்கோ, தோல்விகளை வெற்றிப்படிகளாக மாற்றுவதற்கோ தயாராக இல்லை. எவ்வளவு குறுகிய வழியில் வெற்றி பெற முடியுமோ, எவ்வளவு கஷ்டம் இல்லாமல் நினைத்ததைப் பெற முடியுமோ, அதனைப் பெறுவதில் தான், தங்களது வாழ்வின் நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்