கடவுள் தம் நீதியை வெளிப்படுத்தினார்
திருப்பாடல் 98: 1, 2 – 3b, 3c – 4
”கடவுள் தம் நீதியை வெளிப்படுத்தினார்”
நீதி என்பது ஒருவருக்கு உரியதை ஒருவருக்குக் கொடுப்பது. அநீதி என்பது ஒருவருடைய உடைமையை அவரிடமிருந்து பறிப்பது. நீதி மற்றும் அநீதி என்பதை நாம் தெரிந்து கொள்வதற்கான அடிப்படை அளவுகோல் இதுதான். கடவுள் நீதியை வெளிப்படுத்தினார் என்பது ஒருவருக்கு உரியதை ஒருவருக்கு கொடுப்பது. இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டது. இந்த உலகத்தை அவர் படைத்தபோது, குறிப்பிட்ட மனிதர்களுக்காக இந்த உலகத்தைப் படைக்கவில்லை. இந்த உலகத்தை எல்லாருக்குமாகப் படைத்தார். ஆனால், மனிதன் தன்னுடைய பேராசையினால், மற்றவா்களுக்கு உரியதை, தன்னுடைய தேவைக்கும் அதிகமானதை அபகரிக்கத் தொடங்கினான். இங்கே தான், அநீதி தொடங்குகிறது.
ஒரு குழுவை மற்றொரு குழு அடக்கி வைக்கத் தொடங்குகிறது. அடிமைப்படுத்த தொடங்குகிறது. இங்கு தான் கடவுள் தன்னுடைய நீதியை வெளிப்படுத்துகிறார். சமுதாயத்தின் தாழ்த்தப்பட்ட மக்களை, அடிமைப்படுத்தப்பட்ட மக்களை அவர் கைதூக்கி விடுகிறார். தான் நீதியுள்ள கடவுள் என்பதை, அவர்களுக்கு உதவி செய்வதன் வாயிலாக வெளிப்படுத்துகிறார். தான் எல்லாருக்குமான கடவுள் என்பதை அவர் இந்த உலகம் அறியச்செய்கிறார். அடிமைத்தனம் இந்த உலகத்தில் தழைத்துவிடக்கூடாது என்பதில் கடவுள் உறுதியாக இருக்கிறார். அந்த உறுதி சாதாரண மக்கள் மீது அவர் கொண்டிருக்கிற, அன்பில் வெளிப்படுகிறது. இந்த திருப்பாடலைப் பொறுத்தவரையில், இங்கு தாழ்த்தப்பட்ட மக்களாக இஸ்ரயேல் மக்களும், அடிமைப்படுத்துகிறவர்களாக மற்றவர்களும் சித்திரிக்கப்படுகிறார்கள். அவர்கள் நடுவில் கடவுள் தன்னுடைய நீதியை வெளிப்படுத்துகிறார்.
கடவுள் எப்போதும் ஏழைகள் சார்பிலும், எளியவர் சார்பிலும் இருக்கிறார். அவர் ஒருபோதும் அவர்களைக் கைவிடாத தந்தை. அவர் எந்நாளும் மக்களுக்கு அன்பைப் பொழிகிற தந்தை. அந்த தந்தையிடத்தில், நாமும் முழுமையான அன்பைச் சுவைப்போம். கடவுள் எப்போதும் நிறைவைத் தருவார்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்