கடவுள் செய்யும் நல்லது எதற்கு?
லூக்கா 4:38-44
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
நாம் பிறந்த நாளிலிருந்து நம்மோடு இருந்து நம்மை வழிநடத்தும் ஆண்டவர் நமக்கு எந்தக் குறையும் வைப்பதில்லை. சிங்கக்குட்டிகள் பட்டினி இருந்தாலும் ஆண்டவரைத் தேடுவோருக்கு எந்தக் குறையும் இராது என்பது நமக்குத் தெரியும். நாம் இன்பமாக இருக்கும்போது நம்மோடு இணைந்து மகிழ்கிறார். துன்பமாக இருக்கும்போது நமக்கு துணையாக இருக்கிறார். இப்படி உதவி செய்யும் கடவுள், இப்படி நமக்கு நல்லது செய்யும் கடவுள் அவர் நம் நல்வாழ்விற்கு காரணமாக இருப்பது போல நாமும் அடுத்தவர் நல்வாழ்விற்கு காரணமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றார். அதுதான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் பேதுரு மாமியார் வழியாக விளக்கப்படுகிறது.
பேதுருவின் மாமியார் இறைவனிடமிருந்து ஆசீர்வாதம் பெற்று சுகம் பெறுகிறார். அவருக்கு இறைவனிடமிருந்து நல்வாழ்வு கிடைக்கிறது. நல்வாழ்வை பெற்ற அவர் அடுத்தவருக்கு பணிவிடை செய்கிறார். பணிவிடை என்பது அடுத்தவர் நல்வாழ்விற்கு அவர் காரணமாக, கருவியாக மாறுகிறார் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
நான் மட்டும் உயர்ந்தால் போதும் என நினைப்பவர்கள் கடவுளின் பிள்ளைகள் அல்ல. அவர்கள் சுயநலம் .பெற்றெடுத்த பிள்ளைகள். கடவுளின் பிள்ளைகள் அடுத்தவருக்கு கரம் கொடுப்பவர்கள். கலங்கரை விளக்காக இருப்பவர்கள். மற்றவரின் நல்வாழ்விற்கு உறுதுணையாக இருப்பவர்கள்.
அடுத்தவர் நல்வாழ்விற்கு உதவி செய்வர்களே தங்களுடைய வெற்றியை மனதார கொண்டாட முடியும். அவர்களுடைய புகழ்பாக்களை ஆண்டவர் ஏற்றுக்கொள்வார்.
மனதில் கேட்க…
1. கடவுள் என் நல்வாழ்விற்கு காரணமாக இருக்கிறார் – தினமும் நன்றி கூறுகிறேனா?
2. அடுத்தவர் நல்வாழ்விற்கு நான் எப்படி காணமாக இருக்கிறேன்?
மனதில் பதிக்க…
ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன். ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்(திபா 30:1)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா