கடவுள் எதை விரும்புகிறாரோ அதை அவர் செய்கிறார்.யோபு 23 – 13.

கர்த்தருக்குள் அன்பான சகோதரர், சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

ஆண்டவர் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கத்தையும்,மன விருபபத்தையும் கொடுத்து அதை செய்து முடிக்க அறிவையும், புத்தியையும் கொடுக்கிறார். சில வேளைகளில் நாம் விரும்பும் காரியம் நமக்கு கிடைக்காத பட்சத்தில் நம்முடைய உடலும்,உள்ளமும்,சோர்ந்து போய்விடுகிறது. ஆனால் காத்திருந்து கிடைக்கும் எந்த ஒரு காரியத்திலும் பலமடங்கு ஆசீர்வாதம் இருக்கும். ஆனால் நமக்கோ பொறுமை இல்லாமல் மனம் பதறுகிறோம். யோபுவின் சரித்திரத்தை வாசித்து பார்ப்போமானால் நமக்கு நன்கு விளங்கும்.

ஆண்டவர் அவர்மேல் அன்பு கூரும் யாவரையும் சோதித்து பார்ப்பார். நம்முடைய நம்பிக்கையும்,விசுவாசமும், எந்த அளவு உறுதியாய் இருக்கிறது என்று தமது பிள்ளைகளை சோதித்து பார்க்கிறார். யோபுவும் கூட மாசற்றவரும், நேர்மையானவருமாய் இருந்தார். கடவுளுக்கு அஞ்சி தீயதை விலக்கி வந்தார். கடவுளே அவரைக் குறித்து அவனைப்போல் மாசற்றவனும், நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சி தீமையானதை விலக்கி நடப்பவன் மண்ணுலகில் ஒருவனும் இல்லை என்று ஆண்டவரே அவரை குறித்து சாட்சி கொடுக்கிறார். ஆனாலும் ஆண்டவர் அவரை சோதிக்க ஒப்புக்கொடுத்து தமது முகத்தை மறைத்துக்கொள்கிறார்.

ஆண்டவர் தமது முகத்தை மறைத்துக்கொள்ளும் பொழுது பலவித பாடுகளை நாம் அனுபவிக்கிறோம். அந்த பாடுகளின் வழியாக பொறுமையையும், உண்மையையும் கற்றுக்கொள்ளும்படி கடவுள் நமக்கு வழிவகுக்கிறார். யோபுவும் தாம் எல்லாவற்றையும் இழந்த நிலையிலும் மனம் பதறி ஒரு வார்த்தையும் சொல்லாமல் தரையில் விழுந்து வணங்கி என் தாயின் வயிற்றிலிருந்து பிறந்த மேனியனாய் யான் வந்தேன். அங்கே திரும்புகையில் பிறந்த மேனியனாய் யான் செல்வேன். ஆண்டவர் அளித்தார்.ஆண்டவர் எடுத்துக்கொண்டார். ஆண்டவர் பெயர் போற்றப்பெறுக!என்றார்.

நாமும் கூட சில வேளைகளில் நமது உள்ளம் விரும்பும்படி செய்ய ஆசைப்படுகிறோம். கஷ்டங்களை கண்டு துவண்டு போய்விடுகிறோம். ஆனால் கடவுள் நமக்கு எதை செய்ய விரும்புகிறாரோ அதையே செய்வார். அவரை தடுப்பவர் யார்? அவரே சகலத்தையும் செய்ய வல்லவர், அவர் செய்ய நினைத்ததை செய்வார். நாமும் நமது எல்லாத் தேவைகளையும், நமது வாழ்க்கையையும் அவர் கரத்தில் அர்ப்பணித்து அவரிடம் தஞ்சம் புகுந்தால் நாம் ஆச்சரியப்படும் விதத்தில் நம்மை நடத்தி காத்துக்கொள்வார். யோபு கிடைத்த இரட்டிப்பான ஆசீர்வாதம் நமக்கும் நிச்சயம் கிடைக்கும்.

ஜெபம்

எங்களை அதிகமாய் நேசிக்கும் அன்பு தகப்பனே! நீர் எங்களை சோதிக்கும் பொழுது நாங்கள் துவண்டு போகாதபடிக்கு காத்துக்கொள்ளும். எங்கள் எல்லாக் காரியத்தையும்,தேவைகளையும் உம்மிடம் சொல்லிவிட்டு நீர் காட்டும் பாதையில் நடந்து செல்ல உதவி செய்யும். நீர் உமது உயிரையே கொடுத்து எங்களை மீட்டு காத்தும் வருகிறீர். எங்களுக்குரியதை நீர் செய்யும் மட்டும் நாங்களும் பொறுமையோடும், அன்போடும், காத்திருந்து எங்கள் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள உதவி செய்யும். கிறிஸ்து இயேசுவின் இணையற்ற நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம்.
எங்கள் ஜீவனுள்ள பிதாவே!ஆமென்!அல்லேலூயா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.