கடவுள் எதிர்பார்க்கும் நேர்மை
ஆமோஸ் 9: 11 – 15
“அந்நாட்களில் விழுந்துகிடக்கும் தாவீதின் கூடாரத்தை மீண்டும் உயர்த்துவேன்” என்று, ஆண்டவர் இறைவாக்கினர் ஆமோஸ் வழியாக கூறுகிறார். இங்கு “தாவீதின் கூடாரம்” என்கிற வார்த்தை நம்முடைய கவனத்தை ஈர்க்கிறது. வழக்கமாக, “தாவீதின் இல்லம்” என்று சொல்லப்படுவது, கூடாரமாக மாறியது எப்படி? இதனுடைய பொருள் என்ன? ஏனென்றால், கூடாரம் என்பது சாதாரணமானது, எளியது, பார்ப்பதற்கு சிறியது. ஆமோசின் காலத்தில், தாவீதின் அரசு மிகச்சிறியதாக, “இல்லம்” என்று அழைக்கப்படுவதற்கு முடியாத அளவிற்கு மாறியது. அதனால் தான், இங்கு கூடாரம் என்கிற வார்த்தையை இறைவாக்கினர் பயன்படுத்துகிறார்.
“இதோ நாட்கள் வருகின்றன” என்கிற வார்த்தைகள், அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பதாக இருக்கின்றன. அவர்களுக்கு விரைவில் அழிவு வரப்போகிறது. ஆனாலும், கடவுள் அவர்களை நிர்கதியாக விட்டு விட மாட்டார். அவர்களுடைய குற்றங்களுக்கு ஏற்ற தண்டனையை அனுபவித்தவுடன், அவர்கள் ஆறுதலைப் பெறுவார்கள். ஆமோஸ் இறைவாக்குரைத்த நேரத்தில், அங்கு வளமை இருந்தது. ஆனால், ஆண்டவர் இல்லை. கடவுளின் நாள் வரும் வேளையில், அங்கு வளமையும் இருக்கும். கடவுளும் இருப்பார். அப்போது இஸ்ரயேல் மக்கள் மட்டுமல்ல, ஆண்டவரை ஏற்றுக்கொண்ட பிற இனத்தாரும் வளமை பெறுவர். இந்த பகுதியைத்தான், எருசலேம் நகரில் முதலாம் திருச்சங்கம் நடைபெறுகிறபோது, யாக்கோபு தன்னுடைய கருத்துக்கு ஆதரவாக இதனைப் பயன்படுத்துகிறார். ஆக, மீட்பு என்பது குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமல்ல. இறைவனை நம்பி ஏற்றுக்கொள்கிற அனைவருக்கும் பொதுவானது என்கிற கருத்தை, இறைவாக்கினர் ஆமோஸ் முன்வைக்கின்றார்.
இறைவனின் பார்வையில் நேர்மையான ஒவ்வொருவரும் விலைமதிப்பில்லாதவர்கள். நிச்சயம், ஆண்டவர் அனைவருக்கும் பொதுவானவர். நாம் இறைவனின் பிள்ளைகளாக வேண்டும் என்றால், இறைவாக்கினர் ஆமோஸ் நமக்கு அழைப்பு விடுப்பது போல, நேர்மையுள்ளவர்களாக, நீதியுள்ளவர்களாக இருக்க வேண்டும். அதுதான் நம் வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்