”கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்துகொள்ளவில்லை” (லூக்கா 19:44)
எருசலேம் நகர் யூதர்களுக்கு முக்கியமான இடமாக விளங்கியது. அங்கேதான் யூத மக்களின் தலைசிறந்த மன்னராக விளங்கிய தாவீது தம் தலைநகரை அமைத்திருந்தார். அங்குதான் சாலமோன் மன்னர் கடவுளுக்கு அழகியதொரு கோவில் கட்டியெழுப்பினார். யூத மக்களின் சமய-சமூக மையமாக விளங்கிய எருசலேம் நகருக்கு வெளியேதான் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறந்தார். எருசலேமுக்கு இயேசு எத்தனை தடவை சென்றார் என்பது பற்றித் தெளிவில்லை. எருசலேம் கோவிலுக்குள் நுழைந்து அங்கே வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தோரை இயேசு விரட்டியடித்த செய்தியை எல்லா நற்செய்தி ஆசிரியர்களும் குறிப்பிட்டுள்ளனர் (காண்க: மத் 21:12-17; மாற் 11:15-19; லூக் 19:45-48; யோவா 2:13-22). அந்த நிகழ்ச்சிக்கு முன் இயேசு ”எருசலேமைப் பார்த்து அழுதார்” (லூக் 19:41) என்னும் செய்தியை லூக்கா குறிப்பிடுகிறார். எருசலேம் நகரம் அழிந்துபடும் எனவும் இயேசு முன்னறிவிக்கிறார். இயேசு அறிவித்தபடியே, கி.பி. 70ஆம் ஆண்டில் தீத்து என்னும் உரோமை மன்னரின் படைகள் எருசலேமுக்குள் புகுந்து ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தன; பலர் நாடுகடத்தப்பட்டார்கள்; எருசலேம் கோவிலும் நகரமும் தரைமட்டாக்கப்பட்டன. இத்தகைய அழிவு ஏற்பட்டதற்குக் காரணம்? யூத மக்கள் நடுவே வந்த மெசியாவை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. எனவேதான் எருசலேமை நோக்கி இயேசு, ”உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்துகொள்ளவில்லை” என்றார்.
கடவுள் நம்மைத் தேடி வருகின்ற வேளைகளில் நாம் அவரைக் கண்டுகொள்ளத் தவறிவிடுகிறோம். நம் கண்கள் திறந்திருப்பதுபோலத் தோன்றினாலும் நாம் உண்மையிலேயே பார்வையற்றுப் போகிறோம். கடவுள் நம்மைத் தேடி வருவதை நாம் எப்படிக் கண்டுகொள்வது? கடவுள் நம்மைத் தேடி வருகிறார் என்பதன் முதல் பொருள் கடவுள் நம்மோடு இருக்கின்றார் என்பதே. நம்மிடம் இருக்கின்ற ஒரு பொருளை நாம் தேடிச் செல்வதில்லை. அதுபோல நாமும் கடவுளை நம் உள்ளத்தில் ஏற்கெனவே கொண்டுள்ளதால் அவரைத் தேடி வெளி உலகில் அலைய வேண்டியதில்லை. கடவுள் குடிகொள்ளாத மனிதர் யாரும் இல்லை. எனவே கடவுளை அறிய வேண்டும் என்றால் நாம் பிற மனிதரை அன்புசெய்து அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்மைத் தேடி வருகின்ற கடவுள் உலக நிகழ்ச்சிகள் வழியாகவும் நம்மோடு பேசுகிறார். நமது நம்பிக்கை அனுபவத்தின் வழியாக அவர் நம்மை அணுகி வருகிறார். அவரைக் கண்டுகொள்ள வேண்டும் என்றால் நம்பிக்கை என்னும் நம் அகக்கண்களை நாம் அகலத் திறக்கவேண்டும். அப்போது அவருடைய வருகை நமக்கு மகிழ்ச்சியைக் கொணரும்.
மன்றாட்டு
இறைவா, எங்களைத் தேடி வருகின்ற உம்மை அன்போடு எங்கள் உள்ளங்களில் ஏற்றிட அருள்தாரும்.
~அருட்திரு பவுல் லியோன் வறுவேல்