கடவுள்தாமே கற்றுத் தருவார்
கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார்” என்னும் இறைவாக்கை இன்றைய நற்செய்தி வாசகத்தில்(+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 44-51) இயேசு மேற்கோள் காட்டுகிறார். நாமும் இந்த வசனத்தையே இன்று தியானிப்போம்.
ஆபிரகாம் தன் ஒரே மகன் ஈசாக்கைப் பலியிட மலையுச்சிக்கு அழைத்துச் சென்றபோது, சிறுவன் ஈசாக் தன் தந்தையிடம் கேட்ட கேள்வி: பலிப்பொருள் எங்கே?”. அதற்கு ஆபிரகாம் அளித்த பதில்: கடவுள்தாமே தருவார்”. கடைசியில், கடவுளே ஒரு செம்மறி ஆட்டைப் பலிப்பொருளாக அளித்தார் என்பதை நாம் அறிவோம்.
நாம் நடக்க வேண்டிய பாதையைக் கடவுளே நமக்குக் காட்டுவார். நாம் பேச வேண்டிய சொற்களைக் கடவுளே நமக்குச் சொல்லித் தருவார். நாம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய மதிப்பீடுகளைக் கடவுளே நமக்குக் கற்றுத் தருவார். இதுவே நமது நம்பிக்கை. இதுவே நமது பட்டறிவு. எனவே, கடவுளைச் சார்ந்தே வாழ்வோம். அவரே நம்மை வழிநடத்துவார்.
மன்றாடுவோம்: வழியும், ஒளியும், உண்மையுமான இயேசுவே, நாங்கள் உம்மைப் புகழ்ந்து போற்றுகிறோம். நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை நீரே உமது வார்த்தையாலும், அருள் அடையாளங்களாலும் கற்றுத் தருவதற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
~ அருட்தந்தை குமார்ராஜா