கடவுளை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம்?
”என்னை அனுப்பியவர் உண்மையானவர். அவரை உங்களுக்குத்தெரியாது”. இந்த வார்த்தைகள் தான் இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முக்கியமான வார்த்தைகள். இந்த வார்த்தைகள் தான் இயேசுவைக் குற்றவாளியாக்கிய வார்த்தைகள். இந்த வார்த்தைகள் தான், இயேசுவிடமிருந்து பல நாட்களாக, அவரிடத்தில் குற்றம் காணுகிறவர்கள் எதிர்பார்த்த வார்த்தைகள். அவர்கள் இயேசுவைக் குற்றம் சுமத்த தேடிக்கொண்டிருந்தது கிடைத்துவிட்டது.
இந்த வார்த்தைகளில் அப்படி என்ன தான் குற்றம் சுமத்த முடியும்? யூதர்கள் தாங்கள் இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களாக நினைத்தனர். தாங்கள் கடவுளுக்கு மிக அருகாமையில் உள்ளவர்களாக எண்ணினர். கடவுளை தங்களைத்தவிர அறிந்தவர்கள் யாரும் இல்லை என்ற மமதை கொண்டிருந்தனர். ஆனால், இயேசு அவர்களுக்கு கடவுளைத்தெரியாது என்று சொல்கிறார். சாதாரண மனிதர்கள் யாரும் பேசக்கூடாத இஸ்ரயேலைப்பற்றியும், இஸ்ரயேலின் கடவுளைப்பற்றியும் அவர் பேசியது, கடவுளைப்பழித்துரைத்ததற்கான செயல் என்று அதிகாரவர்க்கத்தினர் அவரை குற்றம் சுமத்தினர்.
கடவுளைப்பற்றி பலரும், பலவிதமாகப் புரிந்துகொண்டுள்ளனர். தங்களது அனுபவத்தை பலவிதமாக வெளிப்படுத்தியுள்ளனர். எழுதியும் வைத்துள்ளனர். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக வெளிப்படுத்தியுள்ளனர். நாமும் கடவுள் அனுபவம் பெற வேண்டும். அந்த அனுபவத்தை மற்றவர்கள் பெறுவதற்கு உதவ வேண்டும். குறுகிய கண்ணோட்டத்தோடு கடவுள் அனுபவத்தை நாம் அணுக முடியாது.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்