கடவுளே மக்களினத்தார் உம்மைப் புகழ்ந்து போற்றிடுவர்
திருப்பாடல் 67: 1 – 2, 4, 5 – 7
இந்த திருப்பாடல் எண்ணிக்கை நூல் 6: 23 – 25 இறைவார்த்தையை மீண்டும் நமக்கு நினைவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது. ஆண்டவர் சொல்கிறார்: ”நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்: நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை. ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக. ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன் மீது அருள்பொழிவாரா. ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக. இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர். நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்”. இங்கு இறைவனின் பணியாளர்கள் மக்களுக்கு எப்படியெல்லாம் ஆசீர்வாதமானவர்களாக இருக்க முடியும் என்கிற செய்தி இங்கு நமக்கு தரப்படுகிறது.
இறைவன் அவருடைய பெயரை மக்கள் புனிதப்படுத்த, அவர்களை வழிநடத்த, தன்னுடைய செய்தியை அறிவிக்க இறைப்பணியாளர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர்கள் இறைவனிடமிருந்து பெற்றிருக்கிற வல்லமையையும், கொடைகளையும் இந்த திருப்பாடல் நமக்கு எடுத்துரைக்கிறது. இந்த உலகின் கடைக்கோடியிலிருக்கிற மனிதர்களும் இறைஅன்பை உணர வேண்டும். இறைவனின் கொடைகளையும் ஆசீரையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தோடு, இறைவன் இறைப்பணியாளர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார். ஒருவரும் விட்டுப்போய்விடக்கூடாது என்பதற்காக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற மக்களிடத்தில், நாமும் கடவுள் கொடுத்திருக்கிற மகிமையைப் பேணிப்பாதுகாப்போம்.
இறை வல்லமையை நாம் பெற்றுக்கொள்வதற்கு நமக்கு இருக்கிற எல்லாவிதமான வாய்ப்புக்களையும் நாம் முழுமையாக பயன்படுத்துவோம். இறைவனின் சிறப்பான கொடைகளை, நம்முடைய வாழ்க்கைக்கு தேவையானவற்றை நாம் பெறுவதற்கான வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக் கொள்வோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்