கடவுளே! நீரே என் இறைவன்
”கடவுளே! நீரே என் இறைவன்”
கடவுள் மீது தன்னுடைய நம்பிக்கையை, உறுதிப்பாட்டை ஆழமாக வெளிப்படுத்துகிற ஒரு பாடல் இந்த திருப்பாடல். எத்தனை தெய்வங்கள் இருந்தாலும், யாவே ஆண்டவர் ஒருவர் தான், தன்னுடைய தலைவர் என்கிற நம்பிக்கையை அறிக்கையிடும் பாடலாகவும் இது அமைகிறது. பொதுவாக, கடவுள் மீது நம்பிக்கை வைக்கிற மனிதர்களுக்கு பலவிதமான சோதனைகள் வருவதுண்டு. துன்ப காலத்தில் மற்றவர்கள், கடவுள் நம்பிக்கையுள்ளவர்களைப் பார்த்து கூறுவது, ”இந்த கடவுளை நம்பினாயே! நீ அடைந்த பலன் என்ன? துன்பங்கள் தான் உனக்கு மிஞ்சுகிறது. பேசாமல் அவரை விட்டுவிட்டு விலகிவிடு”.
நெருக்கடியான நேரத்தில் இப்படி சொல்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடவுள் மீது நம்பிக்கை இருந்தாலும், மற்றவர்களின் தொடர் விமர்சனங்களுக்கு ஆளாகிற பலர், ”ஏன் நமக்கு வீண் பிடிவாதம்?” என்று, வெகு எளிதாக, கடவுளை விட்டுவிடுகிறார்கள். இந்த நெருக்கடியான நேரத்தில் தன்னுடைய விசுவாசத்தை அறிக்கையிடும் திருப்பாடல் ஆசிரியர், கடவுள் மீது தனக்குள்ள ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். கடவுள் மீதான இந்த நம்பிக்கையை, அவர் எழுதுகிற ஒவ்வொரு வரிகளும் வெளிப்படுத்துகின்றன.
நம்முடைய வாழ்விலும், இன்னல்கள், நெருக்கடிகள் வருகிறபோது, நாம் அவற்றிற்கு பயப்படாமல், பலியாகிவிடாமல் நாம் கொண்டிருக்கிற விசுவாசத்தில் உறுதியாக இருக்குமாறு ஆண்டவரிடம் மன்றாடுவோம். ஆண்டவர் நமக்கு அதற்கான பதிலை தருவார்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்