கடவுளே! நீரே என் இறைவன்
திருப்பாடல் 63: 1, 2 – 3, 4 – 5, 7 – 8
கடவுளை தன்னுடைய இறைவனாக வடிக்கிறது இந்த திருப்பாடல். பல தெய்வங்கள் வாழ்ந்த சமுதாயத்தில், இறைவனின் இருப்பையும், அவர் மீதான நம்பிக்கையையும் உறுதிப்படுத்துகிறது இந்த திருப்பாடல். அது சாதாரணமான மனநிலையோடு அல்ல, மாறாக, தீராத பாசம் கொண்ட மனநிலையாக வெளிப்படுத்தப்படுகிறது. இதற்கு அருமையான உருவகம் ஒன்று எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுகிறது.
நீரின்றி வறண்ட தரிசு நிலத்தோடு இது ஒப்பிடப்படுகிறது. நீரின்றி காணப்படும் நிலம் விதைப்பதற்கு ஏற்ற நிலமாக அல்லாமல், வறண்ட நிலமாக காணப்படும். அது நீரை எதிர்பார்த்து காத்திருக்கிறது. நிலம் நீரோடு அமைந்தால் தான், அது பயன்படும். அல்லது அதற்கு மதிப்பு இல்லை. வறண்ட நிலம் ஒன்றுக்கும் உதவாது என்பதால், அதன் மதிப்பு குறைய ஆரம்பிக்கிறது. தன்னுடைய மதிப்பை இழந்து விடாமல் இருக்கவும், தன்னால் பயன் இருக்க வேண்டும் என்கிற ஏக்க உணர்வும், நிலத்தை மழைக்காக ஏங்க வைக்கிறது. அந்த மழை வந்தவுடன், நிலம் சொல்லொண்ணா மகிழ்ச்சியடைகிறது. அதுபோல
இறைவன் இல்லாத உள்ளம் மகிழ்ச்சியை இழந்த உள்ளம். இறைவன் இருக்கிறபோது தான், நம்முடைய உள்ளம் மகிழ்ச்சியடைகிறது. அந்த உள்ளத்தில் இறைவன் வர வேண்டி, நாம் காத்திருக்க வேண்டும். அதற்காக நம்மையே தயார் செய்ய வேண்டும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்