கடவுளே! எம்மீது இரங்கி, ஆசி வழங்குவீராக!
திருப்பாடல் 67: 1 – 2, 4, 5 & 7
கடவுளின் ஆசீரைப் பெறுவதற்கு, அவரது இரக்கம் நமக்கு நிறைவாகக் கிடைக்க வேண்டுமென்று ஆசிரியர் அழைப்புவிடுக்கின்றார். கடவுளின் ஆசீரைப் பெறுவதற்கு எதற்கு இரக்கம் தேவைப்படுகிறது? இரக்கத்திற்கும், ஆசீர்வாதத்திற்கும் என்ன தொடர்பு? கடவுளின் ஆசீரைப் பெற வேண்டுமென்றால், கடவுளின் இரக்கத்தைக் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால், கடவுளின் ஆசீரைப் பெறுவதற்கு நாம் தகுதியற்றவர்கள். ஆசீர்வாதம் என்பது புனிதத்தன்மை நிறைந்தது. கடவுளிடமிருந்து வருவது. அப்படிப்பட்ட ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு, மனிதர்களாகிய நாம் தகுதியற்றவர்கள்.
கடவுளின் இரக்கம் நம்மோடு இருக்கிறபோது மட்டும் தான், அவரது அருளை நாம் பெற்றுக்கொள்வதற்கு வசதியாக இருக்கும். கடவுளின் ஆசீரைப் பெறுவதற்கு முன்னதாக, நம்மையே கடவுளிடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டும். பழங்காலத்தில், முனிவர்கள் காடுகளில் நோன்பிருந்து, தவம் செய்தார்கள். இந்த தவத்தை அவர்கள் செய்வது, கடவுளின் அருளைப் பெற்றுக்கொள்வதற்கான தயாரிப்பிற்காகத்தான். தங்களையே ஒறுத்து, தங்களின் தேவையற்ற ஆசைகளை அடக்கி, உடலை வருத்தி, கடவுளின் மன்னிப்புப்பெற்று, அதன் பிறகு தான், அவர்கள் கடவுளின் அருளைப் பெற்றார்கள். அதேபோல, கடவுளின் அன்பையும், அருளையும் பெற வேண்டுமென்றால், நாமும் முதலில், அவரது இரக்கத்திற்காக மன்றாட வேண்டும்.
கடவுள் எப்போதும் நம்மீது இரக்கம் காட்டக்கூடியவர். நாம் அவரிடத்தில் நம்மை முழுமையாகக் கையளித்தால், நிச்சயம் அவரது அன்பு நம் மீது எப்போதும் இருக்கும். அவர் வழங்கக்கூடிய நிறைவான அருளையும் நாம் எப்போதும் பெற்றுக்கொள்ளலாம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்