கடவுளே! உலகில் எழுந்தருளும். நீதியை நிலைநாட்டும்
திருப்பாடல் 82: 3 – 4, 6 – 7
உலகில் நடக்கும் அநீதிகளையும், தீங்கு செய்வோரையும் கண்டு மனம் வெதும்பிப்பாடும் ஓர் ஆன்மாவின் குரல் தான் இன்றைய திருப்பாடல். இந்த உலகம் இரண்டு வகையானது. மக்களை அடக்கி ஆள வேண்டும் என்கிற எண்ணம் படைத்த அதிகாரவர்க்கத்தினர் ஒருபுறம். தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி, சாதாரண மக்கள் மீது வரிகளையும், பாரங்களையும் சுமத்தி, அவர்களைச் சிந்திக்க விடாது செய்துகொண்டிருக்கிறவர்கள். மற்றொரு பக்கத்தில், வேறு வழியில்லாமல் அதிகாரவர்க்கத்தினரின் அடக்குமுறைக்கு பலியாகிக்கொண்டிருக்கும் ஏழை, எளிய வர்க்கத்தினர்.
இந்த இரண்டு வகையினர்க்கும் இடையே மறைமுக போராட்டம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஏதோ ஒரு வகையில், அதிகாரவர்க்கம் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஏழை, எளியவர்களை நசுக்கிக் கொண்டிருக்கிறது. ஏழைகளும் மீள முடியாமல் இந்த அடிமைத்தனத்தை சகித்துக்கொண்டு, தாங்கள் மீண்டு எழுவதற்கு ஏதாவது வாய்ப்பு அமைந்துவிடாதா? என்ற நம்பிக்கையில் காத்துக்கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், திருப்பாடல் ஆசிரியர், கடவுளை இந்த உலகத்திற்கு வந்து, நீதியை நிலைநாட்டும்படியாக மன்றாடுகிறார். இந்த உலகத்தில் நடக்கும் அநீதிகளை காண சகிக்காமல், அவர் இப்படி முறையிடுகிறார். ஏழைகள், எளியவர்கள் சார்பில் கடவுள் இருக்க வேண்டும் என்று, வேண்டுகிறார்.
நாமும் கடவுளின் இந்த மீட்புப்பணியில் கடவுளுக்கு உதவுகிறவர்களாக, இந்த சமுதாயத்தில் நிலவும் அடிமைத்தனத்தை அறவே ஒழிப்பதற்கு முயற்சி எடுக்கிறவர்களாக மாறுவோம். கடவுளின் கரம் நிச்சயம் நம்மை வழிநடத்துகிறபோது, அவரது குரலுக்கு செவிசாய்ப்போம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்