கடவுளுக்கு ஏற்ற வாழ்க்கை
”தம் உயிரைக் காக்க வழிதேடுவோர் அதனை இழந்துவிடுவர். தம் உயிரை இழப்பவரோ அதனை காத்துக் கொள்வர்” என்று இயேசு சொல்கிறார். இதனுடைய அர்த்தம் என்ன? இந்த உலகத்தில் உயிர் வாழ வேண்டும்? என்கிற எண்ணம் எல்லாருக்குமே இருக்கிறது. சாவைப்பற்றிய பயமும் அனைவருக்கும் இருப்பது இயல்பே. ஆனாலும், இந்த பயத்திற்கு நடுவில் நீதிக்காக, நேர்மைக்காக தங்களது உயிர் எந்த நேரமும் போகலாம் என்ற பயம் இருந்தாலும், தொடர்ந்து அதே உறுதியோடு இருப்பவர்களைத்தான் இயேசு தம் உயிரை இழப்பவர்களாக சொல்கிறார். அவர்கள் நிச்சயம் விண்ணகத்தின் வாயிலை அடைந்துவிடுவார்கள். தங்கள் நிலையான வாழ்வைக் காத்துக்கொள்வார்கள்.
இயேசுவின் வாழ்க்கையைப் பாருங்கள். இயேசு நீதிக்காக, நியாயத்திற்காக குரல் கொடுத்தார். அதன்பொருட்டு அவருடைய உயிர் எப்போது வேண்டுமானாலும் போகும் நிலை இருந்தது. அதற்கான பயமும், கெத்சமெனி தோட்டத்தில் எழுகிறது. ஆனாலும், தனது கொள்கையில் உறுதியாக இருக்கிறார். அது தான் இந்த வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கிறது. இந்த உலகத்தில் உயிரைக்காத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறவர்கள், எப்படியும் வாழலாம் என்று நினைக்கிறார்கள். அதற்காக பல தீய செயல்களைச் செய்து, பணத்தை தவறான வழிகளில் சம்பாதித்து, தாங்கள் வாழுகிறவரை செல்வச்செழிப்போடு வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். இவர்கள் நிச்சயம் தங்களது நிலையான வாழ்வை இழந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.
மேற்கண்ட இரண்டுவிதமான வாழ்வில் நாம் எந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது நமக்கு தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. நாம் வாழக்கூடிய வாழ்க்கை முறையை மாற்றப்போகிறோமா? அல்லது தொடர்ந்து அதே வாழ்வை நியாயப்படுத்தப் போகிறோமா? சிந்திப்போம். கடவுளுக்கு ஏற்ற வாழ்வை வாழ்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்