கடவுளுக்கு உரியவர்கள்
ஒரு யூத ஆண்குழந்தை பிறந்த பிறகு மூன்று சடங்குகளை பெற்றோர் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்.
1. விருத்தசேதனம். குழந்தை பிறந்த எட்டாம் நாள் விருத்தசேதன சடங்கு நிறைவேற்றப்பட்டது. இந்த ஒரு புனிதமான சடங்காக கருதப்பட்டது. எந்த அளவுக்கு என்றால், ஒருவேளை எட்டாம் நாள், ஓய்வுநாளாக இருந்தால், இதனை நிறைவேற்றுவதற்கு எந்த தடையும் இல்லை. சாதாரண வேலையே செய்வதில் அதிக அக்கறை காட்டுகிற ஓய்வுநாளில், விருத்தசேதனம் செய்வதற்கு அனுமதி உண்டு என்பதில் இருந்து, இது எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
2. தலைப்பேறு ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படுதல். எகிப்திலே இஸ்ரயேல் மக்கள் அடிமைகளாக இருந்தபோது, அவர்களை விடுவிக்காமல் பார்வோன் மன்னன் இறுகிய மனத்தோடு இருந்தான். அந்த சமயத்தில், ஆண்டவர் எகிப்தில் இருந்த கால்நடைகள் முதல் மனிதர்கள் வரையிலான தலைப்பேறுகளை சாகடித்தார். ஆனால், இஸ்ரயேல் மக்களின் தலைப்பேறுகள் காப்பாற்றப்பட்டன. அதை நினைவுகூறும் வகையில், தலைப்பேறுகள் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டன. இதனை மீட்பதுதான் இந்த சடங்கு. எண்ணிக்கை 18: 15 முதல் பார்க்கிறோம்: ”மனிதராயினும் விலங்காயினும் முதலில் கருப்பை திறக்கும் அனைத்திலும் அவர்கள் ஆண்டவருக்குப் படைக்கின்ற ஒவ்வொன்றும் உன்னுடையது. ஆயினும், மனிதரில் தலைப்பேறானவனை நீ மீட்டுக் கொள்ளலாம். தீட்டான விலங்கின் தலையீற்றையும் நீ மீட்க வேண்டும். ஒரு மாத காலத்தில் நீ அவற்றை மீட்கும்போது அவற்றின் மீட்புத்தொகை தூயகச் செக்கேல் நிறைப்படி ஐந்து வெள்ளிக்காசுகள் என்று குறிப்பாய். அது பனிரெண்டு கிராம் ஆகும். இது ஏறக்குறைய ஒரு மாதத்தின் கூலியாகும்.
3. தூய்மைச்சடங்கு. ஆண்குழந்தை பிறந்தால், குழந்தையைப் பெற்றெடுத்த தாய் நாற்பது நாட்களுக்கு தீட்டும், பெண்குழந்தையைப் பெற்றெடுத்தால் எண்பது நாட்களுக்கு தீட்டாகவும் இருப்பாள். அவளுடைய அன்றாட வேலைகளைச் செய்வதற்கு தடையில்லை. ஆனால், அவள் ஆலயத்திற்குள் நுழைய முடியாது. லேவியர் 12 ம் அதிகாரத்தில் இது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதனை நீக்குவதற்கு செம்மறி ஆடு எரிபலியாகவும், புறா பாவம் போக்கும் பலியாகவும் ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும். இது அதிகம் செலவாகும் என்பதால் இதற்கு மாற்றாக, இரண்டு மாடப்புறாக்களை ஆலயத்தில் காணிக்கையாக செலுத்தலாம். எனவே, புறாக்கள் ஏழைகளின் காணிக்கையாகப் பார்க்கப்பட்டது. இந்த மூன்று சடங்குகளுமே, பிறக்கக்கூடிய ஒவ்வொரு குழந்தையும் கடவுளுடையது என்பதையும், கடவுளுக்கு உரியது என்பதையும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. நாம் நமது வாழ்வில், நாம் கடவுளுக்கு உரியவர்கள் என்பதை உணர்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்