கடவுளுக்கு அஞ்சுங்கள் ; அவரைப் போற்றிப் புகழுங்கள்.தி.வெ 14 : 7
திருத்தூதர்களாகிய பேதுருவும்,யோவானும்,மக்களோடு பேசிக்கொண்டிருக்கையில் குருக்களும், சதுசேயர்களும் அங்கு வந்து இயேசுவை குறித்து அறிவிப்பது பிடிக்காததால் அவர்களை காவலில் வைத்து பின்பு இயேசுவைப் பற்றி எதுவும் பேசக் கூடாது என்று சொல்லி பின் விடுதலை செய்தனர். அப்பொழுது பேதுரு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நீங்கள் இயேசுவை சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிருடன் எழுப்பினார். இந்த இயேசுவே, ” கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தள்ளப்பட்ட கல். ஆனாலும் முதன்மையான மூலைக் கல்லாக விளங்குகிறார் “.
இயேசுவாலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால், நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை, என்று இயேசுவுக்கு என்று அவரின் நாமத்துக்காக,துணிவோடு மக்களுக்கு எடுத்துரைத்தனர். அவர்களின் துணிவைக்கண்ட தலைமைச் சங்கத்தார் வியந்து நின்றனர். ஏனெனில் அவர்களால் சுகம் பெற்ற மனிதர் பக்கத்தில் நின்றதால் சங்கத்தாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் இயேசுவைப்பற்றி சொல்லக் கூடாது என்று சொல்லியும் கேட்காமல் தைரியத்துடன் உங்களுக்கு செவிசாய்ப்பதா ? கடவுளுக்கு செவிசாய்ப்பதா ? நீங்களே சொல்லுங்கள். ஆனாலும் நாங்கள் கண்டதையும்,கேட்டதை யும்,உங்களுக்கு பயந்துக்கொண்டு எடுத்து உரைக்காமல் இருக்க முடியாது என்றனர்.
திருத்தூதர்கள் அந்த மனிதர்களுக்கு அஞ்சாமல்,கடவுளுக்கு மாத்திரம் அஞ்சி செயல்பட்டனர். இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த கேட்டுக்கொண்டு இருந்த மக்கள் யாவரும் ஒரே மனதுடன் தங்கள் குரலை கடவுள்பால் எழுப்பி பின்வருமாறு மன்றாடினார். ஆண்டவரே! விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்தவர் நீரே, வேற்று இனத்து மக்கள் சீறி எழுவதேன்? மக்களிங்கள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்? என்று சொன்னனர்.தி.பணிகள். 4 : 24 , 25 .
இந்த நாளிலும் நாமும் ஆண்டவரின் நாமத்துக்கு பயந்து, நடந்து அவரைப் பணிந்துக் கொண்டால் அவரின் கோபத்துக்கு தப்பி அவரோடு கூட நாமும் ஆளுகை செய்யலாம். கடவுளின் வார்த்தைக்கு
செவிசாய்க்க மறுத்துவிடாதபடிக்கு பார்த்துக்கொள்ளுங்கள். அவருடைய குரல் அன்று மண்ணுலகை அதிரச் செய்தது. இப்பொழுது அவர் ” இன்னும் ஒரு முறை மண்ணுலகு மட்டும் அல்ல,விண்ணுல கையும் நடுக்கமுறச் செய்வேன் ” என்று உறுதியாக வாக்களித்துள்ளார். எபிரெயர் 12 : 26 ல் வாசிக்கலாம்.
ஆகையால் நீங்கள் இந்தப் பயனற்ற பொருள்களை விட்டுவிட்டு , விண்ணையும், மண்ணையும், கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் உண்டாக்கிய வாழும் கடவுளிடம் திரும்புங்கள் என்ற
நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம். கடந்த காலங்களில் அவரவர் தங்கள் வழிகளில் நடக்க விட்டிருந்தார். ஆனால் இனி அவ்வாறு நடக்கப்போவதில்லை. மனந்திருந்துங்கள். தி.பணிகள் 14 : 15
விண்ணையும் அதில் உள்ளவற்றையும்,மண்ணையும் அதில் உள்ளவற்றையும், கடலையும் அதில் உள்ளவற்றையும்,படைத்த என்றென்றும் வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டு ” இனித் தாமதம் கூடாது, வானத்தூதர் நடுவானில் பறந்து கொண்டிருப்பதை காண்போம் அவர் மண்ணுலகில் வாழ்வோருக்கு, அதாவது நாடு,குலம் ,மொழி, மக்களினம்,ஆகிய அனைத்துக்கும் அறிவிக்கும் பொருட்டு எக்காலத்துக்கும் உரிய நற்செய்தி என்னவென்றால் ” கடவுளுக்கு அஞ்சுங்கள் ; அவரைப்போற்றி புகழுங்கள்;ஏனெனில், அவர் தீர்ப்பளிக்கும் நேரம் வந்துவிட்டது. மண், கடல், நீரூற்றுகள் ஆகியவற்றை படைத்தவரை வணங்குங்கள் ” என்று அவர் உரத்த குரலில் கூறினார் என்று திருவெளிப்பாடு 10 : 7 மற்றும் 14 : 7 ஆகிய வசனங்களில் காணலாம். ஆகையால் யாவரும் அவர் ஒருவருக்கே பயந்து நடந்து அவரைப் பற்றிக்கொண்டு அவர் வழியில் நடந்து அவரையே வணங்குவோம்.
என்றென்றும் வாழும் கடவுளாம் ஆண்டவரே!!
உம்மை போற்றி புகழ்கிறோம். உமக்கு பயந்து உம்மையே வணங்கி உம்முடைய பாதம் பணிந்துக் கொள்கிறோம். உம்முடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் கீழ்படிந்து, விண்ணையும், மண்ணையும் கடலையும், ஆறுகளையும் உண்டாக்கியவர் நீரே என்று அறிந்து அறிக்கையிட்டு மற்றவர்களுக்கும் அதை அறிவித்து உமது வழியில் அழைத்து வர உதவிச் செய்யும். நீரே ஒவ்வொருவருக்கும் போதித்து காத்து எல்லா மக்களையும் உமது அருகில் சேர்த்துக்கொள்ள வேண்டுமாய் உம்மிடத்தில் கெஞ்சி மன்றாடுகிறோம். துதி,கனம், மகிமை யாவும் உமது ஒருவருக்கே செலுத்துகிறோம். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் பெயரால் வேண்டிக்கொள்கிறோம் எங்கள் தந்தையே!
ஆமென்! அல்லேலூயா!!.