கடவுளின் வெளிப்பாடு
இறைவன் தன்னை பலவிதங்களில், பலவடிவங்களில் வெளிப்படுத்துகிறார். இயற்கையின் வடிவத்தில், இறைவார்த்தையின் ஒளியில், மனிதர்கள் வழியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். கடவுள் தன்னை வெளிப்படுத்துகிறபோது, நாம் அதனை உணர்ந்து, ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாக வாழ்வதற்கு, இன்றைய நற்செய்தி வாசகம் அழைப்புவிடுக்கிறது.
பேதுரு இயேசுவைப் பார்த்து, ”நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று சொன்னவுடனே, இயேசு இதனை கடவுளே வெளிப்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார். இது இரண்டு செய்திகளை நமக்குத்தருகிறது. 1. இயேசு எப்போதும் கடவுளின் வெளிப்படுத்துதலுக்கு தன்னையே முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார். எனவே தான், அவரால் வெகுஎளிதாக கடவுளின் வெளிப்படுத்துதலை உணர முடிந்தது. அதனை தாழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறார். தன்னுடைய சீடராக பேதுரு இருந்தாலும், இது கடவுளின் வெளிப்படுத்துதல் என்பதால், அதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவத்தை இயேசு பெற்றிருந்தார். அதனை போலவே, திறந்த உள்ளத்தோடு, கடவுளின் வெளிப்படுத்துதலுக்கு நாம் செவிசாய்ப்போம். 2. கடவுள் யார் வழியாகவும் தன்னை வெளிப்படுத்தலாம். பேதுரு சாதாரண மீனவர். ஆனால், அவர் வழியாக கடவுள் தன்னையே வெளிப்படுத்தினார். அதேபோல, கடவுள் யார் வழியாகவும் தன்னை வெளிப்படுத்துகிறபோது, நாம் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
கடவுள் தன்னை வெளிப்படுத்துகிறபோது, திறந்த உள்ளத்தோடு செவிசாய்க்கிறேனா? சொல்லப்படக்கூடிய வார்த்தைகள் உண்மையாக இருந்தால், யாரிடமிருந்து வருகிறது? எந்த பிண்ணனியில் வருகிறது என்று பார்க்காமல், கடவுளின் வெளிப்படுத்தலாக பார்க்கிறேனா? சிந்திப்போம். அதற்கேற்ப செயல்படுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

