கடவுளின் வாக்கை நம் இதயத்தில் பதிப்போம்.சங்கீதம் 119:11
அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்.
இந்த நாளிலும் நம் கடவுள் நம்முடைய வேண்டுதல்களை கேட்டு நம் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்ய ஆவல் உள்ளவராய் நமது அருகில் இருந்து பார்த்துக்கொண்டு என் மகனே,என் மகளே,உனக்கு என்ன வேண்டும்? நீ கேட்பதை தர ஆவலாய் இருக்கிறேன் நீ என் சித்தப்படி கேட்டால் அதை உனக்கு நிச்சயம் தருவேன்,என்று சொல்கிறார்.ஆகையால் நாம் அவர் நமக்கு அருளிய வாக்கின் படியே கேட்டு அவரிடத்தில் இருந்து நமக்கு தேவையான ஆசீர் வாதங்களை எல்லாம் கேட்டு பெற்றுக்கொள்வோமாக!
ஆண்டவர் நம்மை எந்த அளவு நேசிக்கிறாரோ அந்த அளவு நம்மை சோதித்து பார்ப்பார். நாம் அதை அறிந்து எந்த சோதனையிலும் மனம் சோர்ந்து போகாமல் அவரின் பாதமே தஞ்சம் என்று அவரையே பற்றிக்கொண்டால் நமக்கு மனம் இரங்கி,நம் மேல் மனதுருகி நம் வேண்டுதலை நமக்கு அருளிச் செய்வார்.ஒரு சிறு குழந்தையை ஒரு தாய் குழந்தையின் நலன் கருதி அதை திருத்துவதற்கு அடிப்பார்களேயானால் அக்குழந்தை தன் தாயின் கால்களை பிடித்துக்கொண்டு அழுமே தவிர பக்கத்தில் யார் இருந்து கூப் பிட்டாலும் அவர்களிடம் போகாது. நம் அம்மா அடிக்கிறார்களே நாம் யாரிடமாவது போகலாம் என்று நினைத்து போகவே போகாது.அப்பொழுது தாய்க்கு என்ன தோன்றும்?அப்படியே தன் குழந்தையை தூக்கி அனைத்து முத்தமிட்டு அதின்மேல் இன்னும் அதிகபடியான பாசத்தை காண்பிப்பார்களே தவிர தன் குழந்தையை எந்த தாயும் வெறுத்து ஒதுக்கமாட்டார்கள்.ஒரு தாயே இவ்வாறுஅன்பு செய்தால் தாயினும் மேலாக அன்பு காட்டும் நமது ஆண்டவர் இன்னும் எவ்வளவாய் நமது மேல் உள்ளம் உருகி நம்மை அரவனைத்துக்கொள்வார் என்பதை நன்கு யோசித்து பாருங்கள்.ஒரு தாய் கைவிட்டாலும் நான் உங்களை கைவிடமாட்டேன் என்று நமக்கு வாக்கு அருளியிருக்கிறார். எசாயா 49:15.
ஆகையால் நாமும் நமக்கு ஏற்படும் கஷ்டங்களில் மனம் சோர்ந்து போகாமல் அவரையே உறுதியாக பற்றிக்கொள்வோம். வேறு எங்கும் போகாமல் அவரையே ஏற்றுக்கொள்வோம். அப்பொழுது அவர் நம்மேல் இன்னும் அதிகப்படியான அன்பை வெளிப்படுத்தி நமக்கு கருணை அளித்து நம்மை அவர் மார்போடு அரவணைத்துக்கொள்வார். அவர் வாக்கு மாறாதவர். தாம் சொன்னபடியே செய்வார். யோபு சொல்வது போல் நாமும் ஆண்டவர் அளித்தார்: ஆண்டவர் எடுத்துக்கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப் பெறுக! யோபு 1:21 ல் உள்ளபடி நாமும் சொல்வோம். நம் சோதனையில் வெற்றி பெற்றுஅவருக்கு மகிமையை செலுத்துவோம்.நமது அன்பில் தியாகங்களை உருவாக்கி கொள்வோம். சாதாரண அன்புக்கும்,தியாகமான அன்புக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.அந்த தியாகமான அன்பை நாம் பெற்றுக்கொள்ள நாம் பிறருக்கு தியாகமான அன்பை வெளிப்படுத்தி கடவுள் வகுத்து கொடுத்த பாதையில் செல்லுவோம்.
இதுவே இந்த தவக்காலத்தில் நாம் அவருக்கு காட்டும் நன்றியுள்ள செயலாகும். அவர் எப்படி எந்த ஒரு பிரதி பலனையும் எதிர் பார்க்காமல் நமக்கு தமது உயிரையே கொடுத்து இரத்தத்தை சிந்தினாரோ நாமும் எந்த ஒரு பிரதிபலன் கருதாமல் அவர் சொன்ன வார்த்தைக்கு கீழ்படிந்து நடந்து அவரின் பிள்ளைகள் என்ற பெயரை எடுப்போம்.
ஜெபம்
அன்பே உருவான இறைவா! உமது வாக்குக்கு நன்றி செலுத்துகிறோம் எங்கள் உள்ளம் எப்பொழுதும் உறுதியாக இருந்து உமது திருவுள சித்தத்திகு கீழ்படிந்து நடக்க உதவி செய்தருளும் . உம்மைப்போல் மாற்றும்.நீர் விரும்பும் பாத்திரமாக எங்களை உருவாக்கும்.மீட்பர் இயேசு கிறிஸ்துவின் இனிய நல்ல நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் பிதாவே ஆமென்!! அல்லேலூயா!!!