கடவுளின் வல்லமை வெளிப்பட பொறுத்திருப்போம்
இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்தல் என்பது இயேசுவுக்குப் புதிதல்ல. ஏற்கெனவே தொழுகைக்கூடத்தலைவரின் மகளுக்கும், நயீன் நகர் கைம்பெண்ணின் மகனுக்கும் உயிர் கொடுத்திருக்கிறார். ஆனால், அந்த நிகழ்வுகளுக்கும், இலாசரை உயிர்ப்பிக்கும் நிகழ்வுகளுக்கும் பல வேறுபாடுகள் இருக்கிறது. இலாசர் நோயுற்றிருக்கிறார் என்பது இயேசுவுக்குத் தெரியவந்தாலும், அவர் அங்கு செல்வதற்கு தாமதிக்கிறார். இலாசர் இறந்து நான்கு நாட்கள் கழித்துதான் கல்லறைக்குச்செல்கிறார். ஏனென்றால், இயேசு கல்லறையைத்திறக்கச்சொன்னபோது, மார்த்தா அவரிடம், ‘ ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று. நாற்றம் அடிக்குமே’ என்கிறார். யூதர்களின் நம்பிக்கைப்படி, ஒரு மனிதனுடைய ஆவி தன்னுடைய உடலில் மீண்டும் நுழைவதற்காக, கல்லறையைச்சுற்றி, சுற்றி வருமாம். கல்லறை வாயில் அகற்றப்பட்டால் மீண்டும் அந்த உடலில் நுழைந்துவிட வாய்ப்பு தேடிக்கொண்டிருக்குமாம். நான்கு நாள்கள் ஆனபின், உடல் அழுகிவிடுவதால், தன்னுடைய உடலை அதற்கு அடையாளம் காணமுடியாமல், அங்கிருந்து சென்றுவிடுமாம். இதன் அடிப்படையில் தான் மார்த்தா இப்படிச்சொல்கிறார்.
இந்தப்புதுமையை நன்றாக ஆராய்ந்து பார்த்தால், நமது வாழ்வில் நடக்கக்கூடிய நிகழ்வுகள் கடவுளின் மகிமையை வெளிப்படுத்துவதற்காகக்கூட இருக்கலாம் என்கிற சிந்தனையைத்தருகிறது. இயேசு அவராகவே தாமதிக்கிறார். அவர் நினைத்திருந்தால், இலாசர் சுகமில்லாமல் இருக்கிறபோதே, அவரது இல்லம் சென்று ஆறுதல் மொழி சொல்லி, காப்பாற்றியிருக்கலாம். ஏனென்றால், இலாசரையும், அவரது சகோதரிகளையும் அதிகமாக அன்பு செய்தார். அவரது அன்பின் வெளிப்பாடு தான் அவரது அழுகை. ஆனாலும், இங்கே கடவுளின் வல்லமை வெளிப்படுவதற்காக, இயேசு பொறுமையோடு தன்னுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு, அந்தத்தருணத்திற்காக காத்திருக்கிறார். கடவுளின் வல்லமை நம்மில் செயல்பட நாம் பொறுமையோடு காத்திருக்க வேண்டும். வாழ்வில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளுக்கு நம்மால் உறுதியான பதில் சொல்ல முடியாது. ஆனாலும், கடவுளின் வல்லமை வெளிப்பட நமது வாழ்வு ஒரு ஊன்றுகோலாக இருந்தால், அதற்காக எத்தனை ஆண்டுகளானாலும் காத்திருப்பது கடினமல்ல. அது ஒரு சுகமான சுமை. அதை இலாசரின் குடும்பம் அனுபவிக்கிறது.
நமது வாழ்விலும் துன்பங்கள், துயரங்கள், வேதனைகள், கண்ணீர் வருகிறபோது கடவுளின் வல்லமை நமது வாழ்வில் வெளிப்பட இது ஒரு வாய்ப்பு என்கிற நம்பிக்கை நமக்கு வரவேண்டும். அந்த வல்லமை வெளிப்படுவதற்கு நாம் பொறுமைகாக்க வேண்டும். கடவுளால் இந்த உலகத்தில் ஆகாதது ஒன்றுமில்லை என்கிற விசுவாசம், வாழ்வை மகிழ்ச்சியாக எதிர்கொள்ள நமக்கு வழிவகுக்கும்.
~ அருட்பணி. தாமஸ் ரோஜர்