கடவுளின் மீட்பு

விண்ணுலகையும், மண்ணுலைகையும் படைத்து, விண்ணுலகை ஆள்வதற்கு தேவதூதர்களையும், மண்ணுலகை ஆள்வதற்கு தமது தொற்றத்தின்படியே மனிதனை உருவாக்கி, ஒரே இரத்தத்தால் தோன்றச் செய்து ஆசீர்வதித்து உலகம் தோன்றின காலமுதல் இன்றுவரை யதார்த்தமாய் வழிநடத்திய நம் கடவுளுக்கு மிகவும் பிரியமான அன்பானவர்களே!

 நாம் பாவத்திலும், சாபத்திலும், விழுந்து போகாதபடிக்கு சாத்தானின் நரித்தனமான சோதனைகளிலிருந்து மீட்கவே நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இவ்வுலகில் குழந்தையாய் அவதரித்து நம்முடைய சமாதானத்துக்காக, சந்தோசத்திற்காக அவர் தம்மையே சிலுவையில்
பலியாக ஒப்புக்கொடுத்தார்.

இயேசுகிறிஸ்து தம்மை தாழ்த்தி சிலுவையை சுமந்து தலையில் முள்முடி சூட்டப்பட்டது எதற்காக? மனுகுலமே உங்கள் ஒவ்வொருவருக்காக. கிறிஸ்து என்பது ஒருவழி. அதுவும் ஒரேவழி அதுமட்டும்தான்.  திருத்தூதர்பணி 4:12;  யோவான் 14:6 ; அவராலே அன்றி மீட்பு யார் மூலமாகவும் இல்லை என்பதை அறிந்துக்கொள்ளுங்கள். சிலபேர் அறியாமல் அவர் கிறிஸ்துவர்களுக்காய் சிலுவை சுமந்தார் என்று நினைத்து [நானும்  ஒருகாலத்தில் இதுமாதிரி அறியாமல் இருந்ததால் இதை உங்களுக்கு சொல்கிறேன்.] தங்களுக்கென்று ,ஒரு கல்லினாலோ அல்லது மரத்தினாலோ ஒரு தெய்வத்தை உண்டுபண்ணி வணங்கி அதற்கு பலி செலுத்துகிறார்கள். இந்த உலகத்தையே படைத்த கடவுளை நாம் படைக்க முடியுமா? இதை ஏன் மனிதர்கள் யோசிப்பதில்லை? அன்பானவர்களே நீங்கள் யாவரும் எசாயா 44ம் அதிகாரம்  6 வது வசனத்திலிருந்து 20 வது வசனம் வரை படித்து யோசித்து தியானித்துப்பாருங்கள். உங்களுக்கு நன்கு புரியும்.

உலகத்தையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்த கடவுள் ஒருவரே விண்ணுக்கும், மண்ணுக்கும், ஆண்டவர். மனிதர் கையால் கட்டிய திருக்கோயில்களில் அவர் குடியிருப்பதில்லை. உயிரையும், மூச்சையும், மற்றனைத்தையும், கொடுப்பவர் அவரே. அதனால் அவர் உங்கள் ஒவ்வொரு இருதயத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எனவே மனிதர் கையால் செய்யும் ஊழியம் எதுவும் அவருக்கு தேவையில்லை.

ஒரே ஆளிலிருந்து அவர் மக்களினம் அனைத்தையும் படைத்து அவர்களை மண்ணுலகின் மீது குடியிருக்கச்செய்தார். அவர்களுக்கு குறிப்பிட்ட காலங்களையும், எல்லைகளையும், வரையறுத்துக் கொடுத்தார். மக்கள் அவரை தேடவேண்டும், வணங்க வேண்டும் என்று அப்படிச் செய்தார். தட்டித் தடவியாவது தம்மை கண்டுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.அவர் உங்கள் இல்லத்தில், உங்கள் உள்ளத்தில் வாழவே விரும்புகிறார். திருத்தூதர்பணிகள் 
17 ம் அதிகாரம் 24 லிருந்து 27 வரை படியுங்கள்.

உங்களை மீட்க காத்திருக்கும் அவரை இன்று ஏற்றுக்கொள்வீர்களா?? இந்த நாளிலாவது அவர் உங்களுக்காக அழுவதை, ஏங்குவதை காணமாட்டீர்களா? அவருடைய அன்பை அறிந்துக்கொள்ள
மாட்டீர்களா? லூக்கா 19:41-42. அவரை பற்றிக்கொண்டு, ஏற்றுக்கொண்டு பாக்கியவான்களாய் வாழ நானும் உங்களை வாழ்த்துகிறேன். சந்தோஷமாக இருங்கள்.

ஜெபம்:

அன்பின் இறைவா!!! மீட்பின் தந்தையே, உம்மை போற்றுகிறோம், வணங்குகிறோம். அறியாமல் இருக்கும் ஒவ்வொரு பிள்ளைகளையும் நீர் மீட்டு உமதண்டை கொண்டுவரும்படி ஜெபிக்கிறோம். உம்மை தடவியாவது கண்டுபிடிக்க உதவி செய்யும். கல்லான இதயத்தை எடுத்துப்போட்டு சதையான இதயத்தை தந்து ஆட்கொள்ளும். உம்மால் செய்ய முடியாத காரியம் ஒன்றுமில்லையே! உம்மால் எல்லாம் செய்ய முடியும். எங்களை மீட்டுக்கொள்ளும். நித்திய
வாழ்வுக்கு ஏற்றவர்களாக மாற்றி உம்மோடு அழைத்துச் செல்லும்.

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே,ஆமென்,அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.