கடவுளின் மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது
திருப்பாடல் 145: 2 – 3, 10 – 11, 12 – 13
நம்முடைய அன்றாட உரையாடலில் நாம் பல வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். பயன்படுத்துகிற வார்த்தைகளை ஒரே பொருளோடு பயன்படுத்துகிறோமா? என்றால், நிச்சயம் இல்லை. நமக்கு உதவி செய்கிறவர்களை “அவர் மிகவும் நல்லவர்” என்று சொல்கிறோம். கடவுளையும் நல்லவர் என்று சொல்கிறோம். இந்த இரண்டு வார்த்தைகளும் ஒரே அர்த்தத்தைக் குறிக்கக்கூடியதா? என்றால், நிச்சயம் இல்லை. கடவுளுக்கு பயன்படுத்துகிற வார்த்தையின் அர்த்தம் பல மடங்கு, நம்முடைய அறிவுக்கு எட்டாத வகையில் போற்றுதற்குரியது. இன்றைய திருப்பாடலில் ஆசிரியர், ஆண்டவரை ”மாண்புமிக்கவர்” என்று சொல்கிறார்.
மாண்பு என்பது உயர்ந்த மதிப்பீட்டைக் குறிக்கக்கூடியது. தாராள உள்ளத்தோடு, மன்னிக்கக்கூடிய மனப்பான்மையோடு, எதையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தாழ்ச்சியான மனப்பாங்கோடு, பொறுமையைக் கடைப்பிடிக்கிற ஒருவரை, மாண்புமிக்கவர் என்று சொல்கிறோம். கடவுளுக்கு இந்த வார்த்தையோடு ஒப்பிடுகிறபோது, மனிதர்களுக்கு பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளை விட, பல மடங்கு உயர்வானது. அது நம் அறிவுக்கு எட்டாதது என்பதைத்தான் இந்த திருப்பாடலில் ஆசிரியர் சொல்ல விரும்புகிறார்.
நம்முடைய வாழ்வில் பெரும்பாலும் கடவுளை மனித இயல்புகளோடு பொருத்திப்பார்க்க பழகிவிட்டோம். கடவுள் உயர்ந்தவர், மிகவும் மாண்புக்குரியவர் என்பதை நாம் உணர வேண்டும். அதனை இந்த திருப்பாடல் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. கடவுளை மாண்புமிக்கவராகப் பார்ப்போம்.