கடவுளின் பிரசன்னம்
விடுதலைப்பயணம் 20: 7 ல் பார்க்கிறோம்: “உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே: ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார்”. எண்ணிக்கை 30: 3 சொல்கிறது: ஆண்டவருக்குப் பொருத்தனை ஒன்றை ஒருவன் செய்துகொண்டால், அல்லது ஆணையிட்டுக் கூறிய உறுதிமொழிக்குத் தன்னை உட்படுத்திக்கொண்டால் அவன் தன் வார்த்தையை மீறக்கூடாது. தான் உரைத்தபடியெல்லாம் அவன் செய்ய வேண்டும்”. இணைச்சட்டம் 23: 21 ல் பார்க்கிறோம்: “உன் கடவுளாகிய ஆண்டவருக்கு நேர்ச்சை செய்திருந்தால், அதைச் செலுத்துவதற்கு காலந்தாழ்த்தாதே. ஏனெனில் அது உனக்குப் பாவமாகும். இவையெல்லாம் கடவுள் பெயரால் செய்யப்படும் உறுதிமொழிகளைப்பற்றிச் சொல்லப்படுவது ஆகும்.
இயேசு வாழ்ந்த காலத்தில் பொய்யாணை பற்றி இரண்டு விரும்பத்தக்காத செயல்கள் நடைபெற்று வந்தன. 1. தேவையில்லாத காரணங்களுக்கெல்லாம் மக்கள் ஆணையிட்டனர். மிகவும் சாதாரணமாக ஆணையிடுவதை எடுத்துக்கொண்டனர். 2. கடவுள் மீது ஆணையிடுதல். கடவுள் மீது ஆணையிடுவதை கண்டிப்பாக நிறைவேற்றியே ஆக வேண்டும் என்ற கட்டளை இருந்தது. அதிலும் ஒரு விலக்கு, கடவுள் அல்லாமல் விண்ணகம் மீதோ, மண்ணகம் மீதோ ஆணையிட்டால், அதை பொருட்டாக எடுக்காத மனநிலையும் இருந்தது. இங்கே இயேசு சொல்ல விரும்புவது கடவுளையும் இந்த பூமியையும் பிரிக்க முடியாது என்பதே. விண்ணகமும் கடவுள் இருக்கும் இடம், மண்ணகமும் கடவுள் வாழும் இடம்தான். அப்படியிருக்க கடவுள் மீது ஆணையிடுவதை பொருட்டாக எடுக்கிறவர்கள், மற்றதன் மீது ஆணையிடுவதையும், நிறைவேற்ற வேண்டியதாக கருத வேண்டும். அப்படி இல்லையென்றால், அது கடவுளையே அவமதிப்பதற்கு சமமாகும்.
கடவுளையும், இந்த உலகத்தையும் நாம் எப்போதுமே பிரித்துப் பார்க்க முடியாது. இந்த உலகம் கடவுளின் படைப்பு. இந்த உலகம் முழுவதிலும் கடவுளின் பிரசன்னம் இருக்கிறது. கடவுள் அல்லாமல் இந்த உலகத்தில் ஒன்றுமே இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.
~ அருட்பணி. தாமஸ் ரோஜர்