கடவுளின் பராமரிப்பு
பார்வையற்ற மனிதரை இயேசு குணப்படுத்துகிற நிகழ்ச்சி இன்றைக்கு தரப்பட்டுள்ளது. பிறவியிலே பார்வையற்ற மனிதருக்கு குணப்படுத்துகின்ற புதுமை இந்த ஒன்றுதான். பார்வையற்ற அந்த மனிதர் சீடர்களுக்கு நன்கு தெரிந்தவராக இருக்க வேண்டும். எனவேதான் அவர் பிறவியிலேயே பார்வையற்றவராக இருப்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். யூதர்கள் எப்போதுமே பாவத்திற்கும், துன்பத்திற்கும் தொடர்பு உண்டு என்று நம்பினார்கள். எனவேதான் சீடர்கள் அந்த மனிதன் குருடனாய் பிறந்ததற்கு அவனுடைய பாவமா? பெற்றோர் செய்த பாவமா? என்ற கேள்வியைக் கேட்கிறார்கள். இங்கே நமக்கு ஒரு சந்தேகம் வரலாம். அவன் பிறவியிலேயே குருடன். பின் எப்படி அவன் செய்த பாவம் காரணமாக இருக்கமுடியுமென்று. கிரேக்க அறிஞர்; பிளேட்டோவின் ‘ஆன்மா’ பற்றிய கருத்தை யூதர்கள் நம்பினர். ஆன்மா என்பது ஓர் உயிர் உருவாவதற்கு முன்னதாகவே இருக்கிறது என்ற கோட்பாட்டை நம்பினர். எனவே, பார்வையற்றவன் பிறப்பதற்கு முன்னதாகவே, அவனுடைய ஆன்மா தவறு செய்திருக்கும், எனவேதான் அவன் குருடனாய் பிறந்திருக்கிறான் என்பது சீடர்களின் வாதம்.
இயேசு பாவத்திற்கும் துன்பத்திற்கும் உள்ள தொடர்பைப்பற்றி விளக்க முற்படவில்லை. ஆனால், கடவுளால் எல்லாம் இயலும் என்பதை இங்கே வலியுறுத்திக்கூறுகிறார். அதாவது, யோவான் நற்செய்தியாளருக்கு ஒவ்வொரு புதுமையும் கடவுளின் மாட்சியையும், மாண்பையும் எடுத்துரைப்பதாக இருந்தது. மற்ற நற்செய்தியாளர்கள் இயேசு புதுமைகளை பரிவுக்கும் (மாற்கு 6: 34) இரக்கத்திற்கும் (மாற்கு1: 41) ஒப்பிடுகிறார்கள். ஆனால், யோவான் நற்செய்தியாளர் இயேசுவின் புதுமைகள் ஒவ்வொன்றிலும், கடவுளின் வல்லமையை, ஆற்றலை எடுத்துரைக்கிறார். கடவுளால் இயலாதது இந்த உலகத்தில் எதுவும் இல்லை. அது பிறவி முடவனாக இருந்தாலும் சரி, பிறவிக்குருடனாக இருந்தாலும் சரி. கடவுளால் எல்லாமே முடியும் என்பதை இயேசு உறுதியாகக்கூறுகிறார். வாழ்க்கையில் துன்பங்கள், துயரங்கள், கலக்கங்கள் வருகின்றபோது, கடவுளின் அருள், ஆற்றல், வல்லமை நம் வழியாக வெளிப்படுவதற்கான வாய்ப்பாகக்கூட இருக்கலாம் என்கிற நம்பிக்கை நமக்கு வேண்டும்.
வாழ்க்கையில் சோர்வுகள், வருத்தங்கள், பாரங்கள் வருகின்றபோது நாம் நம்பிக்கை இழக்கக்கூடாது. இறந்தவர்களை உயிர்ப்பிக்கச்செய்யும் ஆற்றல் உள்ள கடவுளுக்கு, நமது குறைகளை மாற்றுவது கடினமான காரியம் அல்ல. கடவுள் என்னை நிச்சயம் பராமரிப்பார் என்கிற நம்பிக்கை என்னுடைய வாழ்வை நிச்சயம் மேம்படுத்தும். வாழ்வை நம்பிக்கையோடு வாழ்வதற்கு உதவும்.
– அருட்பணி. தாமஸ் ரோஜர்