”கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள்” (யோவான் 1:51)
கடவுள் படைத்த படைப்புகளில் எல்லாம் உயர்ந்த படைப்பு மனிதரே என்று கூறி நாம் பெருமைப்படுகிறோம். ஆயினும் விவிலியம் தரும் செய்திப்படி, கடவுள் ”வானதூதர்களை”யும் படைத்தார். இவர்கள் கடவுளைப் புகழ்ந்து பாடுவர்; கடவுளின் தூதர்களாகச் செயல்படுவர். குறிப்பாக, மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகிய தூதர்களைத் திருச்சபை இன்று நினைவுகூர்கிறது. மிக்கேல் தீய சக்திகளை எதிர்த்துப் போராடி மக்களைக் காப்பவராகச் சித்தரிக்கப்படுகிறார் (காண்க: திவெ 12:7-12). கபிரியேல் மரியாவை அணுகி, கடவுள் மனிதராக உலகில் பிறப்பார் என்னும் செய்தியை அறிவிக்கிறார் (காண்க: லூக் 1:26-38); இரபேல் (தோபி 12:14-15) நலமளிப்பவராக வருகிறார். கடவுளின் படைப்பு மனிதரின் கண்களுக்குத் தெரிகின்றவை மட்டுமல்ல, நம் புலன்களுக்கு எட்டாதவையும் அவருடைய படைப்பாக உள்ளன என நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். வானதூதர்களும் கடவுளைச் சார்ந்தே உள்ளனர் என்பதையும் திருச்சபை கற்பிக்கிறது. கடவுளின் விருப்பத்தைச் செயல்படுத்துவதே வானதூதர்களின் பணி. அதுபோலவே, மனிதரும் செயல்பட அழைக்கப்படுகிறார்கள்.
வானதூதர்கள் என்னும் உருவகம் வழியாக இன்னொரு உண்மை வலியுறுத்தப்படுகிறது. அதாவது, அவர்கள் கடவுளின் இல்லத்தில் அவருக்குப் புகழ்செலுத்துவதுபோல இயேசுவின் வாழ்விலும் கடவுளின் செயல் துலங்குகிறது. இயேசு கடவுளோடு இணைந்தவர் என்றும் கடவுளுக்கு நிகரான மாட்சி உடையவர் என்று கூறுவதும் ”கடவுளின் தூதர் மானிடமகன்மீது ஏறவும் இறங்கவும் செய்வர்” என்று கூறுவதும் ஒரே பொருளில்தான். மிக்கேலைப் போல தீமையை எதிர்த்துப் போராட நாம் துணிய வேண்டும். கபிரியேலைப் போல மக்களுக்கு நற்செய்தி அறிவிப்பவர்களாக நாம் மாற வேண்டும். இரபேலைப் போல மக்களுக்கு நலம் கொணர்பவர்களாக நாம் திகழ வேண்டும். ஏனென்றால் மனிதரைக் கடவுள் தமக்கும் வானதூதர்க்கும் சற்றே சிறியவராக ஆக்கியுள்ளார் (காண்க: திபா 8:5).
மன்றாட்டு
இறைவா, உம் திருப்புகழை என்றென்றும்; பாடுகின்ற வரத்தை எங்களுக்குத் தந்தருளும்.
~அருட்திரு பவுல் லியோன் வறுவேல்