கடவுளின் துணையால் எம்மதிலையும் தாண்டலாம்.தி.பா.18:29.
கர்த்தருக்குள் அன்பான சகோதரர்,சகோதரிகளுக்கு, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் அன்பின் நாமத்தில் நல்வாழ்த்துக்கள்.
ஆண்டவரிடம் அடைக்கலமாக வரும் ஒருவரையும் அவர் வெறுத்து ஒதுக்கமாட்டார்.தாயினும் மேலான அன்புக்காட்டி நம்மை கட்டி அரவணைத்து பாதுக்காத்துக்கொள்வார் அவருடைய பாதத்தில் தஞ்சம் புகுந்து அவரின் துணையால் எம் மதிலையும் தாண்டும் கிருபையை பெற்றுக்கொள்வோம்.
நாம் 1 சாமுவேல் 17ம் அதிகாரத்தை வாசித்து பார்ப்போமானால் அதில் தாவீது கோலியாத்தை தோற்கடித்த விதத்தை காணலாம். சாதாரணமாக இருந்த தாவீது ஆடுகளை மேய்த்துக்கொண்டு இருந்தவரிடம் அவர் தகப்பனார் பாளையத்தில் இருக்கும் உனது சகோதரர்களுக்கு பால்கட்டிகளை கொடுத்துவிட்டு அவர்கள் நலமுடன் இருக்கிறார்களா? என்று பார்த்துவிட்டு வா என்று அனுப்புகிறார். தாவீதும் ஆவலோடு தமது சகோதரர்களை கானச் செல்கிறார். அங்கு போனபொழுது
பெலிஸ்தியனான கோலியாத் இஸ்ரயேல் ஜனங்களை அவமானப்படுத்தும் விதத்தில் உங்களில் தைரியமுள்ளவன் எவனோ அவன் என் ஒருவனிடம் போரிட வேண்டும் என்று சவால் விட்டுக்கொண்டு இருந்தான். அதைக்கேட்ட இஸ்ரயேல் படைத்தளபதிகள் யாவரும் பயந்து அவனை எதிர்கொள்ள தயங்கினர்.
ஆனால் தமது சகோதரர்களை பார்க்கப்போன தாவீது அவன் இழிவாக பேசிய சொல்லைக்கேட்டு படைகளின் ஆண்டவர் என்னோடு நம்மோடு இருக்கும் பொழுது இந்த விருத்தசேதனம் இல்லாத இவன் எம்மாத்திரம் என்று சொல்லி அவனுக்கு எதிர்க்கொண்டு போக தயாராகி தான் சிங்கத்தையும், கரடியையும் கொன்ற விதத்தை ராஜாவிடம் சொல்லி இந்த விருத்தசேதனம் இல்லாத அவனும் அவைகளில் ஒன்றைப்போல் இருப்பான் என்று கூருகிறார். மேலும் தாவீது என்னை சிங்கத்தின் கைக்கும், கரடியின் கைக்கும் தப்புவித்த ஆண்டவர் இந்தப் பெலிஸ்தியன் கைக்கும் தப்புவிப்பார் என்றார்.
அதன்படியே மிகுந்த தைரியத்துடன் அந்த கோலியாத்தை ஒருவனாய் எதிர்த்து நின்று இன்றே ஆண்டவர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார். நான் உன்னை வீழ்த்தி உன் உடலை துண்டுப்பேன் உன் பிணத்தை வானத்து பறவைக்கு கையளிப்பேன். இதனால் உலகில் உள்ள யாவரும் இஸ்ரயேலரிடைய கடவுள் இருக்கிறார் என்று அறிந்துக்கொள்வார்கள் என்று சொல்லி தான் வைத்திருந்த கவணில் ஒரு கல்லை வைத்து அதை குறிப்பார்த்து எரிந்து அவனை தரையில் வீழ்த்துகிறார் தாவீது. அத்தனை வீரமாக பேசியவன் ஒரே ஒரு கல்லில் சுருண்டு விழுந்து உயிர் விடுகிறான்
எனக்கன்பானவர்களே!நாமும் இதைப்போல் ஆண்டவர் நமக்கு அருளிய வார்த்தைகளை நமது இதயத்தில் பதித்து ஒரேகல்லைப்போல ஒரே வார்த்தையால் எம்மதிலையும் தாண்டலாம். தாவீதுக்கு உதவிய ஆண்டவர் நம் ஒவ்வொருவருக்கும் உதவிச் செய்வார். அவருடைய நாமத்தை இயேசு என்ற நாமத்தை பற்றிக்கொண்டால் நாம் எல்லாவற்றிலும் வெற்றி அடைந்து வெற்றியுள்ள வாழ்க்கை வாழ்ந்து ஆண்டவரின் பெயருக்கு மகிமை சேர்க்கலாம்.
ஜெபம்
அன்பின் இறைவா!உம்மை போற்றுகிறோம், புகழ்கிறோம், ஆராதிக்கிறோம். தாவீதைப்போல நாங்களும் உம்மிடத்தில் மிகுந்த விசுவாசத்தை வைத்து உமது வசனம் என்னும் பட்டயத்தினால் ஒரே கல்லினால் எங்களுக்கு நேரிடம் எல்லா சோதனைகளையும் ஜெயித்து உமக்கு மகிமை சேர்க்க உதவி செய்யும். எங்கள் கண்களால் காணாதவற்றிலும் நம்பிக்கை வைத்து உமது துணையுடன் எதையும் செய்ய முடியும் என்று மன உறுதியுடன் செயல்பட்டு எம்மதிலையும் தாண்ட கிருபை அளித்தருளும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே!ஆமென்!!அல்லேலூயா!!.