கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவோம்!
கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுகிறவரே என் தாயும், சகோதரியும், சகோதரரும் ஆவார் என்று இயேசு சொல்கிறார். இந்த உலகத்திலே நாம் நமக்கென்று ஒரு திட்டம் வைத்திருக்கிறோம், நம்முடைய பெற்றோரும் நமக்கென்று ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள். கடவுளும் நமக்கென்று ஒரு திட்டம் வைத்திருக்கிறார். அந்த திட்டத்தை அறிந்து செயல்படுத்துவதுதான் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவது ஆகும்.
தாயின் கருவறையில் உருவாவதற்கு முன்பே நம்மை முன்குறித்து வைத்திருக்கிற நமது இறைவன், நாம் செய்ய வேண்டிய பணி என்று ஒன்றை, நமக்காக வைத்திருக்கிறார். நம்முடைய வாழ்வின் நோக்கம் அந்தப்பணியைச்செய்து முடிப்பது தான். நம்மைத்தவிர, வேறு யாரும் அந்தப்பணியைச்செய்ய முடியாது. ஆனால், அதே வேளையிலே, கடவுள் யாரையும் வற்புறுத்துவதில்லை. முழுச்சுதந்திரம் கொடுத்திருக்கிறார். நமக்காக கடவுள் வைத்திருக்கிற அந்தப்பணியை அடையாளம் கண்டுகொண்டு, அதைத்திறமையாக செய்து முடிக்கும்போது, இறைத்ருவுளத்திற்கு பணிந்து நடக்கிறவர்களாக நாம் வாழ்கிறோம். இயேசுவின் குடும்பத்தில் ஒருவராக நாம் மாறுகிறோம். கடவுளின் திருவுளத்தை அறிந்துகொள்ள நமக்கு உதவி செய்வது, நம்முடைய செபம். செபம்தான் கடவுளின் திருவுளத்தை அறிந்துகொள்ள இயேசுவுக்கு உதவியது. கெத்சமெனி தோட்டத்தில் ‘தந்தையே, கூடுமானால் இந்தத்துன்பக்கிண்ணம் என்னை விட்டு அகலட்டும்’ என்று சொன்னபோதும், கடவுளின் திருவுளம் இதுதான் என்பதை அவருக்குத்தெரியப்படுத்தி, அதை உறுதிப்படுத்தியது இயேசுவின் செபம். நற்செய்தியாளர்கள் அனைவரும் தெளிவாகக்கூறியிருக்கிறார்கள், இயேசு தனிமையான இடங்களுக்குச்சென்று செபிப்பதற்கு அதிகமான நேரத்தைச்செலவிட்டார் என்று.
நாமும் செபத்திற்கு அதிகநேரம் செலவழிப்போம். கடவுளின் திருவுளத்தை அறிந்து செயல்படுத்துவோம்.
~ அருட்பணி. தாமஸ் ரோஜர்