கடவுளின் திருவுளத்தை ஏற்றுக்கொள்வோம்
வாழ்க்கையிலே, புரிந்து கொள்ள முடியாத புதிர்களும், விடை காண இயலாத கேள்விகளும், நிறைய உள்ளன. அப்படிப்பட்ட புரிந்து கொள்ள முடியாத, நம் சிற்றரிவிற்கு எட்டாத கேள்விகளில் முதன்மையாக இருப்பது இன்று , திருச்சபையோடு நாம் இணைந்து கொண்டாடிக் கொண்டடிருக்கின்ற, மூவொரு கடவுள் பெருவிழா. ஒரே கடவுள் ஆனால், மூன்று ஆட்களாய் இருக்கிறார் என்ற, மறை உண்மையைத்தான், மூவொரு கடவுள் என்று, நாம் கொண்டாடுகிறோம். இது புரிவதற்கு சற்று கடினமான ஒன்று. தந்தை கடவுளா? என்றால், நாம் ஆம், கடவுள் என்கிறோம். மகன் இயேசுவைக் கடவுள் என்றால், ஆம் என்கிறோம். தூய ஆவி கடவுள் என்றால், ஆம் என்கிறோம். ஆனால், மூன்று கடவுளா? என்றால், இல்லை, ஒரே கடவுள் என்கிறோம். ஏனென்றால், மூன்று பேருக்குமே, யாதொரு வேறுபாடுமின்றி, ஒரே ஞானம், ஒரே வல்லமை, ஒரே திருவுளம், ஒரே கடவுள் தன்மை இருக்கிறது. எனவே, அவர்கள், மூன்று ஆட்களாக இருக்கிறார்கள் என்கிறோம். நாமும் குழம்பி, புதிதாக வருகிறவர்களையும் குழப்பி விடுகிறோம். நம்மால் விடை காணவே முடியாதா? பொதுவாக, இந்த மூவொரு கடவுளைப்புரிந்து கொள்ள, நமக்கு கொடுக்கப்படுகிற விளக்கம்: தண்ணீர். தண்ணீர் எப்படி திடமாக, திரவமாக, ஆவியாக மூன்று நிலைகளைப் பெறுகிறதோ, அதேபோல், ஒரே கடவுள் மூன்று ஆட்களாக இருக்கிறார் என்று, விளக்கம் கூறுகிறார்கள்.
எத்தனையோ பேர், இந்த பூமியிலே, ஏதாவது ஒரு குழப்பத்தை உண்டாக்க வேண்டும் என்று, காத்துக்கொண்டிருக்கிறார்கள். பணத்தை எந்த வழியிலாவது சம்பாதித்தே ஆக வேண்டும், என்று வெறிகொண்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களுக்கு குழி வெட்டி, தாங்கள் முன்னேற சந்தர்ப்பம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் ஒரு குறையும் இல்லையே, எனக்கு ஏன் இந்த துன்பம்? என்று, கடவுளை நோக்கிப் புலம்புகிற ஒவ்வொரு மக்களுடைய ஏக்கங்களுக்கு, விடையாக வருவது, இன்றையப் பெருவிழா. எவ்வாறு மூவொரு இறைவன் என்ற, மறையுண்மையை விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்கிறோமோ, அதேபோல், வாழ்க்கையிலே, விடைகாண இயலாத கேள்விகள் வரும்போது, இறைவன் மீது நம் முழுநம்பிக்கையை வைத்து, நம் விசுவாசத்தை ஆழப்படுத்த அழைக்கப்படுகிறோம்.
“தந்தையே, நீர் விரும்பினால் இந்தத் துன்பக்கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும்” – எதற்காக இந்தத் துன்பம். நீர் நினைத்தால், ஒரு நொடியில், இந்த கயவர்களை அழித்துவிட்டு, இந்த உலகத்தை புதிய உலகமாக மாற்ற முடியும். அப்படியிருக்க ஏன், ஒரு பாவமும் அறியாக, நான் துன்பப்பட வேண்டும். இயேசு, கெத்சமனி தோட்டத்திலே, இறைவனை நோக்கி புலம்புகிறார். விடை காணத் தவிக்கிறார். நான் என்ன தவறு செய்தேன்? எதற்காக நான் துன்பப்பட வேண்டும், இயேசு வேதனையில் துடிக்கிறார். ஆனால், இறுதியாக, ஆனாலும் தந்தையே, எனது விருப்பப்படி அல்ல, உமது விருப்ப்படியே ஆகட்டும், என்று, தன்னையே இறைவன் முன் கையளிக்கிறார். வாழ்க்கையிலே, நம்முடைய துன்பங்களுக்கு விடை காண முடியாத, எனக்கு ஏன் இந்தத் துன்பம் என்று, இறைவனை நோக்கி கேள்வி எழுப்ப, நாம் நினைக்கின்ற சமயங்களில், இறைவன் மீது நம்பிக்கை வைத்து, அவரிடம் நம்மை ஒப்படைக்க நாம், அழைக்கப்படுகிறோம்.
– அருட்பணி. தாமஸ் ரோஜர்