கடவுளின் அழைப்பு
அழைப்பின் மகிமை இன்றைய வாசகத்தில் வெளிப்படுத்தப்படுகிறது. மக்கள் ஆயரில்லா ஆடுகள் போல இருப்பதைப்பார்த்து, அவர்கள் மீது அவர் பரிவு கொள்கிறார். அறுவடை மிகுதி, வேலையாட்களோ குறைவு என்று அவர் சொல்கிறார். ஆகையால், தேவையான வேலையாட்களை தமது அறுவடைக்கு அனுப்பும்படி, அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள், என்று இயேசு சொல்கிறார். இங்கு அழைப்பு எங்கிருந்து, யாரிடமிருந்து வருகிறது? என்பது தெளிவாகச் சொல்லப்படுகிறது.
அழைப்பு கடவுளிடமிருந்து வருகிறது. அழைப்பு என்பது மனிதர்கள் தேர்வு செய்வது அல்ல. மாறாக, கடவுள் கொடுக்கிற கொடை. அவரது தாராள உள்ளத்தில் பொழியப்படக்கூடியது. ஆக, கடவுளே நம்மை அவரது பணிக்காக தேர்வு செய்கிறார் என்றால், அது எவ்வளவுக்கு மகிமைமிக்க பணி. ஒரு சாதாரண நிறுவனத்தில் நடக்கும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளும் நாம், வெற்றி பெற்றால், தேர்ந்தெடுக்கப்பட்டால், எவ்வளவுக்கு மகிழ்ச்சியடைகிறோம். சாதாரண மனிதரின் தேர்வுக்கு நாம் இவ்வளவு மகிழ்ச்சியடைகிறோம் என்றால், கடவுள் நம்மை தேர்ந்தெடுத்தால், எந்த அளவுக்கு நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். அதுதான் பெறுதற்கரிய சிறந்த பாக்கியம்.
நமது வாழ்வில் இந்த அழைப்பின் மேன்மையை நாம் உணர்ந்திருக்கிறோமா? அழைக்கப்பட்டவர்களுக்கு உரிய மரியாதையை, மாண்பை நாம் கொடுக்கிறோமா? அவர்களின் வார்த்தைகளுக்கு எந்த அளவுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம்? சிந்தித்துப் பார்ப்போம். அழைப்பின் மகிமையை நாமும் உணர்ந்து, மற்றவர்களுக்கும் உணர்த்துவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்