கடவுளின் அருள்
மறைநூல் அறிஞர்களும், பரிசேயர்களும் இறைவாக்கினர்களுக்கு அழகான கல்லறைகளைக் கட்டினார்கள். நேர்மையாளர்களின் நினைவுச்சின்னங்களை அழகுபடுத்தினார்கள். இவ்வளவையும் செய்துவிட்டு, ”எங்கள் மூதாதையர்களின் காலத்தில் நாங்கள் இருந்திருந்தால், இறைவாக்கினர்களின் கொலைக்கு உடந்தையாக இருந்திருக்க மாட்டோம்” என்றார்கள். ஆனால், அவர்கள் மூதாதையர்களின் காலத்தில் இருந்திருந்தாலும், அதைத்தான் செய்திருப்பார்கள் மற்றும் இப்போதும் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள் என்று இயேசு உறுதியாக, அதே வேளையில் கடுமையாகச் செய்கிறார்.
எதற்காக இயேசு இவ்வளவு கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்? என்பதற்கு தொடர்ந்து வரக்கூடிய வார்த்தைகள் பதில் தருகிறது. இஸ்ரயேல் வரலாறு முழுவதுமே இறைவாக்கினர்களைக் கொன்றொழித்த இரத்தம்படிந்த வரலாறாகத்தான் இருக்கிறது. அதற்கு ஆபேலும், செக்கரியாவும் சாட்சிகளாகக் குறிப்பிடப்படுகிறார்கள். ”இவ்வாறு நேர்மையாளரான ஆபேலின் இரத்தம் முதல் திருக்கோவிலுக்கும் பலிபீடத்திற்கும் நடுவே நீங்கள் கொன்ற பரக்கியாவின் மகன் சக்கரியாவின் இரத்தம்வரை இம்மண்ணில் சிந்தப்பட்ட நேர்மையாளர் அனைவரின் இரத்தப்பழியும் உங்கள் மேல் வந்து சேரும்” (23: 35) ஏன் ஆபேலும், சக்கரியாவும் இங்கே குறிப்பிடப்படுகிறார்கள்? ஆபேலின் கொலை முதல் புத்தகமான தொடக்கநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எபிரேய விவிலியத்தில் 2குறிப்பேடு புத்தகம் தான், கடைசியாக கொடுக்கப்பட்டுள்ளது. அதுதான் பழைய ஏற்பாட்டின் கடைசி புத்தகம். ஆக, இஸ்ரயேல் வரலாற்றின் தொடக்கம் முதல் கடைசி வரை, இரத்தம்படிந்த வரலாறாகத்தான் இருக்கிறது என்பது, நமக்குத்தரப்படுகிற பொருள். இயேசு தான் பாடுகள் படப்போகிறதையும், தனக்குப்பின்னால் தனது நற்செய்தியை அறிவிக்கிறவர்கள் பட இருக்கிற வேதனையையும் குறிப்பிடுகிறார். ஆக, இஸ்ரயேல் மக்களின் மனங்களில் எந்த மாற்றமும் இல்லை என்பது நமக்குத்தரப்படுகிற செய்தி.
நமது வாழ்வை திரும்பிப்பார்த்தால், நாமும் கூட பல வேளைகளில் கடவுளுக்கு எதிரான செயல்பாடுகளிலும், அவருடைய வார்த்தைக்கு எதிரான காரியங்களிலும் ஈடுபட்டிருப்பதை உணர முடியும். நம்மை அவர்பக்கம் திருப்புவதற்கு அவர் விடுத்த அழைப்பையும் உதறித்தள்ளியிருக்கிறோம். கடவுளுடைய அருள் நமக்கு கிடைக்கிறபோது, அதனைப்பற்றிப்பிடித்துக் கொள்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்