கடவுளின் அன்பு
யோவான் நற்செய்தியாளர் அன்பு என்கிற வார்த்தைக்கு அதிக அழுத்தம் தருகிறார். அது கடவுளின் அன்பாக இருக்கட்டும். இயேசு மக்கள் மீது காட்டுகின்ற அன்பாக இருக்கட்டும். அதேபோல, தனது நற்செய்தியின் சிந்தனையாக, மக்கள் கடவுளின் அன்பைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எழுதுவதாக இருக்கட்டும். அன்பே அவரது நற்செய்தியின் அடிப்படையாக இருக்கிறது. அன்பிற்கு அதிக அழுத்தம் கொடுக்கிறார். ஆனால், நாம் வாழக்கூய இந்த உலகத்தில் அன்பு என்கிற வார்த்தை தவறாக திரித்துப்பயன்படுகிறது. அன்பின் ஆழம் தெரியாமல், அன்பின் மகத்துவம் புரியாமல், அன்பின் அர்த்தமே அறியாமல் அன்பு பார்க்கப்படுவது, சிதைக்கப்படுவது வேதனையிலும் வேதனை.
உண்மையான அன்பை இந்த உலகத்தில் பார்ப்பதும் அரிதாக இருக்கிறது. எதிர்பார்க்கின்ற அன்பு தான் அதிகமாக காண முடிகிறது. என்னை அன்பு செய்தால் நான் அன்பு செய்வேன், என்று கைம்மாறு கருதுகிற அன்புதான் அதிகம். எதிர்பார்ப்பில்லா அன்பு அரிது. ஆனால், கடவுளின் அன்பு எதிர்பார்ப்பில்லாத அன்பு. கடவுள்தன்மையில் இருந்தாலும், மனிதர்களை அன்பு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லையென்றாலும், அவர் அன்பு செய்கிறார். அதற்காக, தன் ஒரே மகனை பலிகொடுக்கும் அளவுக்கு அன்பு செய்கிறார். இந்த அன்பிற்கு உலகத்தில் ஈடுஇணையே கிடையாது என்கிற அளவுக்கு,கடவுளின் அன்பு நிறைந்து காணப்படுகிறது. அதுதான் கடவுள். மனிதர்கள் பல வேளையில் அந்த அன்புக்கு நன்றியில்லாதவர்களாக இருக்கிறார்கள். ஆனாலும், கடவுள் உண்மையுள்ளவராக இருக்கிறார்.
கடவுள் நமக்கு காட்டுகின்ற அன்பை நாம் மற்றவர்களுக்கு காட்ட வேண்டும். கடவுளின் அன்பை நாம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க முயற்சி செய்ய வேண்டும். கடவுளிடமிருந்து அன்பைப் பெற்றுக்கொண்டால் மட்டும் போதாது. அந்த அன்பில், நமது வாழ்வில் நாம் நிலைத்திருக்க வேண்டும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்