கடவுளின் அன்பு
இந்த உலகம் எதற்காக படைக்கப்பட்டது? இந்த உலகத்தில் நாம் எதற்காக வாழ்கிறோம்? இந்த உலகத்தில் நாம் வாழ்வதன் பயன் என்ன? இதுபோன்ற கேள்விகள் நிச்சயம், இந்த வாழ்வைப் பற்றி, நம்மைப்பற்றி சிந்திக்கிற அனைவருடைய மனதிலும் எழக்கூடிய சிந்தனைகளாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக, இந்த உலக முடிவில் நாம் எங்கு செல்கிறோம்? வாழ்க்கை இருக்கிறதா? ஆன்மா எங்கே செல்கிறது? போன்ற கேள்விகளுக்கு பல பதில்களை, மதங்கள் நமக்கு சொல்கிறது. இன்றைய நற்செய்தியில், நாம் எங்கிருந்து வருகிறோம்? எங்கு திரும்பிச்செல்கிறோம்? என்பதை, இயேசுவின் வார்த்தைகள் நமக்குக்கற்றுத்தருகிறது.
நாம் அனைவருமே தந்தையிடமிருந்து வந்தவர்கள். எனவே, நாம் திரும்பி தந்தையிடத்தில் திரும்பிச்செல்ல வேண்டும் என்று இயேசு சொல்கிறார். இயேசு தந்தையிடமிருந்து வந்திருக்கிறார். அவர் இந்த உலகத்திற்கு வந்தது, கடவுளின் வெறுப்பை நமக்குச் சொல்வதற்கு அல்ல. மாறாக, கடவுள் நம்மை எந்த அளவுக்கு அன்பு செய்கிறார் என்பதை நமக்கு அறிவிப்பதற்கு. இயேசுவும் தந்தையின் அன்பை மக்களுக்கு காட்டுகிறார். அதன்பிறகு, அவர் தந்தையிடத்தில் செல்கிறார். நாம் அனைவரும் இந்த உலகத்தில், தந்தையின் அன்பைப் பெற்றவர்களாக வந்திருக்கிறோம். அந்த அன்பை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டும். அப்போதுதான் நாம் தந்தையிடம் திரும்பிச்செல்ல முடியும். அதற்கான தகுதி பெற முடியும். எனவே, நமது வாழ்வின் நோக்கத்தை அறிந்துகொண்டவர்களாக, தந்தையின் அன்பை உணர்ந்து கொண்டவர்களாக வாழ, நாம் அன்பை வெளிக்காட்டுவோம்.
இயேசு தந்தையின் அன்பை நாம் நிறைவோடு, முழுமையாக வாழ நமக்குக் கற்றுக்கொடுத்தார். அந்த அன்பை நாம் சுவைப்பதற்கு எல்லா வழிகளிலும் உதவியாக இருந்தார். அதேபோல, கடவுளின் அன்பை மற்றவர்களும் சுவைப்பதற்கு நாம் முயற்சி செய்வோம். நாமும் சுவைத்து, மற்றவர்களும் அந்த அன்பில் மகிழ்ந்திருக்கச் செய்வோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்