கடவுளன்பும், பிறரன்பும்
யூதச்சட்டங்களைப்பொறுத்தவரையில், இரண்டுவிதமான பார்வைகள் இருந்தது. சட்டங்களில் பெரிய சட்டங்கள் தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என ஒரு குழுவும், சிறிய பெரிய என அனைத்து சட்டங்களும் முக்கியத்துவம் வாய்ந்தது என மற்றொரு குழுவும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். இப்படிப்பட்டச் சூழ்நிலை இருந்த காலத்தில்தான், ஒருவர் இயேசுவிடம் வந்து, ”அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்கிறார்.
அந்த மனிதர் இந்த இரண்டு பார்வையைப் பிரதிபலிக்கிறார். அனைத்திலும் முதன்மையானது கடவுளன்பா? அல்லது பிறரன்பா? என்பதுதான் அவர் கேட்ட கேள்வி. ஒரு குழு கடவுளை அன்பு செய்வதுதான் முதன்மையானது என்று நம்பியது. ஏனென்றால், கடவுள்தான் அனைத்திற்கும் மேலானவர். அவரன்றி அணுவும் அசையாது என்று உறுதியாக நம்பினர். மற்றொரு குழுவோ, மற்றவர்களை அன்பு செய்வதைத்தான் கடவுள் முழுமையாக விரும்புகிறார் என்று நம்பினார்கள். இயேசு இரண்டையும் இணைத்துப்பேசுகிறார். அதுதான் இயேசுவின் சிறப்பு. இதுவரை எந்த யூத போதகர்களும், இரண்டையும் இணைத்து விளக்கம் தந்ததில்லை. ஆனால், இயேசு கடவுளன்பையும், பிறரன்பையும் நேர்கோட்டில் வைத்துப்பார்க்கிறார். ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லையென்பது இயேசுவின் வாதம்.
மற்றவர்களை அன்பு செய்யாமல், கடவுளை ஒருவர் அன்பு செய்ய முடியாது. பிறரன்புதான், கடவுளன்பை முழுமையாக்குகிறது. நிறைவாக்குகிறது. கடவுளை மட்டும் அன்பு செய்வதோ, மற்றவர்களை மட்டும் அன்பு செய்வதோ முழுமையான, நிறைவான அன்பாக முடியாது.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்