கடமையே கண் !
இன்றைய முதல் வாசகத்தில் (திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-2,12-14) நற்செய்தி அறிவிக்க வேண்டிய தன் கடமையைப் பற்றிப் பேசும்போது, பவுலடியார் நம் இதயத்தைத் தொடுகின்றார். நற்;செய்தி அறிவிப்பைப் பற்றிப் பேசும்போது, அவர் மூன்று செய்திகளைத் தருகின்றார்:
- நற்செய்தி அறிவிப்பது அவர்மேல் சுமத்தப்பட்ட கடமை. அதை அவர் நிறைவேற்றியே தீர வேண்டும். அது தன்னார்வத் தொண்டு அல்ல, மாறாக சுமத்தப்பட்ட கடமை.
- நற்செய்தி அறிவிப்பு என்பது ஓட்டப்பந்தயம் போன்றது. அதில் பங்கேற்பவர் வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு ஓட வேண்டும்.
- நற்செய்தி அறிவிப்பு என்பது குத்துச் சண்டை போன்றது. அதில் பங்கேற்போர் பலவிதமான பயிற்சிகளைச் செய்து தங்களைத் தகுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.
பவுலடியார் தன்னைப் பற்றிப் பேசியது திருமுழுக்கு பெற்ற நம் அனைவருக்கும் பொருந்தும். நற்செய்தி அறிவிக்கும் கடமை நம் அனைவருக்கும் உரியது. அதை நாம் சுமக்க வேண்டும். வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு ஓடவேண்டும். அதற்கான பல்வேறு பயிற்சிகளையும், தியாகங்களையும் மேற்கொள்ள வேண்டும்.
மன்றாடுவோம்: தாயின் வயிற்றிலேயே எங்களைப் பெயர் சொல்லி அழைத்த இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எந்த விதத்திலும் தகுதியற்ற எங்களை உமது நற்செய்தியின் ஊழியர்களாகத் தேர்ந்துகொண்டதற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். இந்த அழைத்தலுக்கேற்றவாறு வாழ அருள்தாரும். உமது தூய ஆவியின் கொடைகளால் எங்களை நிரப்பியருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
அருள்தந்தை குமார்ராஜா