ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகள் !
எழுபத்திரண்டு சீடர்களை ஆண்டவர் இயேசு இருவர் இருவராக நற்செய்தி அறிவிக்க அனுப்புகின்ற நிகழ்ச்சியை இன்று வாசிக்கிறோம். அவர்களுக்கு அறிவுரை பகர்கின்ற பொழுது இயேசு கூறிய வார்த்தைகள்: புறப்பட்டுப் போங்கள். ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். இவை எச்சரிக்கை விடுக்கின்ற சொற்கள். இயேசுவின் சீடர்கள் ஆட்டுக்குட்டிகள் போன்றும், இந்த உலகின் மக்கள் ஓநாய்கள் போன்றும் இங்கே உருவகப்படுத்தப்பட்டுள்ளனர். உலகம் பல்வேறுவிதமான தீமைகளை, தந்திரங்களை, இருளின் படைக்கலங்களாகக் கொண்டிருக்கிறது. இயேசுவின் காலத்தில் இருந்தது போன்றுதான் இன்றைய உலகமும், இருளின் மக்களும் இருக்கின்றனர். ஆட்டுக்குட்டிகளைச் சுற்றி வளைத்துக் காயப்படுத்தும் ஓநாய்கள் போன்று இன்றைய ஊடகங்கள், வணிக மையங்கள், அநீத அமைப்புகள், ஏன் அரசுகளும்கூட அமைந்திருக்கின்றன. இவர்களின் மத்தியில்தான் சீடர்கள் நற்செய்தி அறிவிப்பவர்களாக, அமைதியை அருள்பவர்களாக, நோய்களைக் குணமாக்குபவர்களாகச் செயல்படவேண்டும். எனவே, விழிப்பாய் இருப்போம். இறையருள் வேண்டுவோம்.
மன்றாடுவோம்: அன்பே உருவான ஆண்டவரே, எங்களை நீர் உம் சீடர்களாக அழைத்து, அமைதியின் கருவிகளாகச் செயல்பட ஆணையிட்டுள்ளீர். உம்மைப் போற்றுகிறோம். ஓநாய்கள்போல் எங்களைக் காயப்படுத்தக் காத்திருக்கும் உலகின் தீமைகள் அனைத்தினின்றும் எங்களைக் காத்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
~ அருள்தந்தை குமார்ராஜா