ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை.
லூக்கா 8:16-18
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
நாம் செய்கிற எதையும் கடவுள்முன் மறைக்க முடியாது. அவர் அனைத்தையும் அறியும் ஆண்டவர். வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. அறியப்படாமலும் வெளியாகாமலும் ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை. ஆகவே மறைவாய் செய்யும் பாவங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்ற அவசரச் செய்தியோடு வேகமாக வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். பாவங்களுக்கு நம்மால் முற்றுப்புள்ளி வைக்க முடியும். முயன்றால் முடியாததது உண்டோ? இரண்டு முயற்சிகளை எடுத்து பார்ப்போமா.
1. பயம்
தீமையின் மீதான தெய்வபயம் கண்டிப்பாக இருக்க வேண்டும். தெய்வபயம் பாவத்தின் தொல்லைகளிலிருந்து விடுதலை அளிக்கிறது. தெய்வபயம் பாவத்தினால் வரும் விளைவுகளை நம் கண்முன் நிறுத்துகிறது. நமக்கு தடை போடுகிறது.
2. பாசம்
கடவுள் மீது உண்மையான பாசம் நாம் வைத்திருந்தால் நாம் பாவம் செய்யமாட்டோம். அவர் கொடுத்த வாழ்வை பிரமாதமாக வாழ்வோம். பாசம் இல்லாத பிள்ளைகள் தான் அவருக்கு பிரமாணிக்கமாக இருப்பதில்லை. அவர் மீது பாசம் கொண்டவர்கள் அலகையிடம் பாசம் வைப்பதில்லை. அலலையின் மீது நாம் பாசம் வைக்கும்போது நாம் ஆண்டவருக்கு எதிராக துரோகம் செய்கிறோம்.
மனதில் கேட்க…
3. நான் மறைவாக செய்த பாவங்கள் எத்தனை? கடவுள் அனைத்தையும் அறிந்தவர் அல்லவா?
4. கடவுள் மீது பாசம் கொண்டு என் பாவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நான் தயாரா?
மனதில் பதிக்க…
வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. அறியப்படாமலும் வெளியாகாமலும் ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை. (மத் 8:17)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா