ஒட்டுமொத்த உலகத்தின் மீட்பு
யோவான் நற்செய்தியாளரின் வார்த்தை ஒவ்வொன்றுமே பொருள் உள்ள, அர்த்தம் தரக்கூடிய வார்த்தை. அந்த வகையில், நற்செய்திப் பகுதியில் பயன்படுத்தப்பட்டிருக்கிற 153 என்கிற எண்ணுக்கு ஏதோ ஓர் அர்த்தம் இருக்க வேண்டும் என்று, விவிலிய அறிஞர்கள் கருதுகிறார்கள். இதற்கு பலவிதமான விளக்கங்கள் தரப்பட்டாலும், விவிலியத்தின் தந்தை ஜெரோம் கொடுக்கிற விளக்கம் பெரும்பான்மையானவர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
பாலஸ்தீனப்பகுதியில் வாழும் மக்கள் 153 வகையான மீன்கள் இருப்பதாக நம்பினர். இந்த எண், மீன்களின் வகையைக் குறிப்பதாக இருக்கலாம். எல்லா வகையிலிருந்தும் ஒரு மீன் என்ற அடிப்படையில் இது பொருள் கொடுக்கலாம். அதாவது, இந்த உலகத்தில் இருக்கிற அனைத்து வகையான மக்களும், இயேசுவில் ஒருநாள் ஒன்றுகூட்டப்படுவர். அதேபோல இவ்வளவு மீன்கள் கிடைத்தும் வலை கிழியாமல் இருந்தது என்றும் சொல்லப்படுகிறது. திருச்சபை எத்தனை எண்ணிக்கையில் மக்கள் அதனைத் தேடி வந்தாலும், அவர்களை ஏற்றுக்கொண்டு வாழ்வைத்தரக்கூடிய அளவுக்கு மிகப்பெரியது, வலிமையுடையது என்பதை, இது நமக்கு எடுத்துச் சொல்கிறது.
மீட்பு என்பது குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் உரியது. கடவுள் ஒட்டுமொத்த உலகத்தையும் மீட்க வேண்டுமென்றே விரும்பினார். அதேபோல நமது சிந்தனைகளும், எண்ணங்களும் விரிவடைய வேண்டும். நமது பார்வை விசாலமானதாக இருக்க, இறைவனிடம் மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்