ஐயா, நீர் உம் வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி?
நிலத்தில் பயிரேற்ற விரும்புகின்ற உழவர் நல்ல விதைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுப்பது வழக்கம். நல்ல தரமான விதையாக இருந்தால்தான் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது அவர் எதிர்பார்ப்பு. நல்ல விதைகளை நிலத்தில் தூவிய பின்னர், அவ்விதைகள் நிலத்தில் வேரூன்றி, பயிர் முளைத்து, வளர்ந்து பலன் தரும் என்று காத்திருக்கின்ற வேளையில் நல்ல பயிரின் ஊடே களைகளும் தோன்றிவிட்டன, நல்ல விதை நம் இதயத்தில் தோன்றுகின்ற நல்ல எண்ணங்கள், சிந்தனைகள், அவற்றிலிருந்து பிறக்கின்ற நல்ல சொற்கள், நல்ல செயல்கள் ஆகியவற்றைக் குறிக்கின்றன என வைத்துக்கொள்வோம். அதே நேரத்தில் நம் உள்ளத்தில் களை போலத் தோன்றுகின்ற தீய சிந்தனைகள், அவற்றிலிருந்து பிறக்கின்ற தீய சொற்கள், தீய செயல்கள் ஆகியவையும் நம் வாழ்வில் இருக்கத்தான் செய்கின்றன. இதை எப்படி விளக்குவது? கடவுளின் கைகளிலிருந்து நல்லதாகப் பிறந்த இவ்வுலகில் தீமை புகுந்தது எப்படி? இக்கேள்விக்குப் பதில் தேடுகின்ற முயற்சி பல நூற்றாண்டுகளாகவே நிகழ்ந்து வருகிறது.
— கிறிஸ்தவ சமயம் இக்கேள்விக்குத் தருகின்ற பதில் என்ன? தீமை இவ்வுலகில் தோன்றுவதற்குக் காரணம் தொடக்க காலத்தில் மனித வரலாற்றில் நுழைந்துவிட்ட பாவம்தான். முதல் மனிதர் கடவுளுக்கு எதிராகச் செயல்பட்டதால் அவர்கள் வழியாகப் பாவம் உலகில் நுழைந்து வரலாற்றில் எல்லா மனிதர்களையும் பாதித்துவிட்டது. உலகில் நிலவும் பாவம் மனித உள்ளத்தில் பாவ நாட்டமாகத் தோன்றுகிறது; மனிதருக்கும்; கடவுளுக்குமிடையே உள்ள உறவினை முறிக்க பாவம் முயல்கிறது. என்றாலும், அறுவடைக் காலத்தில் நல்ல பயிரும் களைகளும் அடையாளம் காணப்பட்டு நல்ல பயிர் களஞ்சியத்தில் சேர்க்கப்பட, களை தீயிலிட்டு எரிக்கப்படுவது போல, மனித வரலாற்றின் இறுதியில் பாவம் என்னும் தீமையும் அதன் விளைவுகளும் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டு, நன்மை வெற்றி பெறும். நன்மையே உருவான கடவுள் நம்மைத் தம்மோடு நிலையான அன்புறவில் இணைத்துக்கொள்வார். கிறிஸ்துவின் சிலுவைச் சாவினால் நாம் புத்துயிர் பெற்று, நல்ல பயிரைப் போல நற்பயன் நல்குவோம்.
மன்றாட்டு
இறைவா, எங்கள் உள்ளத்தில் உமது வார்த்தையாகிய நல்ல விதையைப் பெற்றுக்கொண்ட நாங்கள் வளர்ந்து, முதிர்ந்து உலகின் வாழ்வுக்காக நற்பயன் நல்கிட அருள்தாரும்.
–அருட்திரு பவுல் லியோன் வறுவேல்