ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்
திருப்பாடல் 146: 7, 8 – 9a, 9bc – 10
மலைப்பொழிவில் இயேசுவின் அமுத மொழிகள் இங்கே திருப்பாடல் 146 க்கு பொருத்தமான முறையில் பல்லவியாகப் பாடப்படுகிறது. ஏழைகள் என்றால் யார்? விவிலியத்தில் ஏழைகள் என்கிற வார்த்தைக்கு மாற்றாக, கிரேக்க மொழியில் இரண்டு வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறத. 1. Penes 2. Ptokos. ‘Penes’ என்றால் நமது வழக்கிலே, அன்றாடங்காய்ச்சிகள் என்று பொருள் கொள்ளலாம். தங்களுடைய உழைப்பை மட்டுமே நம்பி இருக்கிறவர்கள். உழைப்பு தான் இவர்களின் செல்வம்.
‘Ptokos’ என்றால், தங்களுடைய ஒருவேளை உணவுக்காக கூட மற்றவர்களுடைய தயவை எதிர்பார்த்து இருப்பவர்கள். மனிதன் என்கிற தங்களுடைய மாண்பை இழந்து, மற்றவர்களிடம் கையேந்துபவர்கள். ஒருவேளை உணவு கிடைத்தால் உண்டு, இல்லையேல் அன்றைக்கு பட்டினி தான் என்கிற தரித்திர வாழ்வை வாழக்கூடியவர்கள். இன்றைய தியான வாக்கியத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தை, இரண்டாவது அர்த்தத்தை வெளிப்படுத்தக்கூடிய வார்த்தை. கடவுள் தான் எனக்கு துணை என்று, தங்களை முழுமையாக ஒப்படைக்கக்கூடியவர்கள் தான் ஏழைகள். பணம் என்பது அளவீடு அல்ல. ஒருவர் கொண்டிருக்கிற மனநிலை தான், அவரை ஏழை என்று அடையாளப்படுத்துகிற மதிப்பீடு. ஒருவர் பணக்காரராக இருப்பதால், ஏழையரின் உள்ளத்தைக் கொண்டிருக்க முடியாது என்றில்லை. அதேபோல ஒருவர் ஏழையாக இருப்பதால், அவர் ஏழை உள்ளத்தைக் கொண்டிருக்கிறார் என்றும் நாம் சொல்ல முடியாது. மனநிலை தான் நம்மை ஏழையாக, பணக்காரராக அடையாளப்படுத்துகிறது.
நமது வாழ்க்கையில் நாம் கடவுள் மீது முழுமையான நம்பிக்கை வைக்கிறபோது, நாம் கடவுளின் நிறைவான ஆசீரைப் பெற்றுக்கொள்ள முடியும். அவரை முழுமையாக ஏற்றுக்கொண்டு, நிறைவாக வாழ முடியும். அப்படிப்பட்ட ஏழை உள்ளத்தோடு வாழ்வதற்கு நாம் உறுதி எடுப்போம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்