ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்
ஏழைகள் என்றால் யார்? ஏழைகளுக்கு, விவிலியத்திலே இரண்டு வார்த்தைகள், கிரேக்க மொழியில் பயன்படுத்தப்படுகிறது. தங்களுடைய உழைப்பை மட்டுமே நம்பி இருப்பவர்கள். இவர்கள் தினமும் உழைப்பதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, தங்கள் வாழ்க்கையை ஓட்டுபவர்கள். தங்களுக்கென்று, வேறு எதுவும் கிடையாது. உழைப்பை நம்பி வாழ்க்கையை நடத்துபவர்கள். Pவழமழள என்றால், தங்களுடைய ஒருவேளை உணவுக்காக கூட மற்றவர்களுடைய தயவை எதிர்பார்த்து இருப்பவர்கள். மனிதன் என்கிற தங்களுடைய மாண்பை இழந்து, மற்றவர்களிடம் கையேந்துபவர்கள். ஒருவேளை உணவு கிடைத்தாலும் உண்டு, இல்லையென்றால் பட்டினி என்ற நிலையோடு வாழ்பவர்கள்.
மத்தேயு நற்செய்தியிலே, இந்த இரண்டாவதாக பொருள்படக்கூடிய ஏழையைத்தான் இங்கே குறிப்பிடுகிறார். அதாவது, ஒருவேளை உணவுக்காகக்கூட, மற்றவர்களை எதிர்பார்த்து, சார்ந்து இருக்கக்கூடிய ஏழைகளை, இங்கே கூறுகிறார். அப்படியானால், ஏழையரின் உள்ளத்தவர்கள் என்றால் என்ன பொருள்: யாரெல்லாம், தங்களுடைய செல்வம், திறமை, அழகு, பதவி, பட்டங்கள் மீது நம்பிக்கை வைக்காமல், கடவுள் ஒருவர்தான் எங்களுடைய வாழ்க்கை, கடவுள் தான் எனக்கு எல்லாமே என்று, கடவுளை மையமாகக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் தான், ஏழையரின் உள்ளத்தவர். அப்படிப்பட்டவர், பணக்காரராகவும் இருக்கலாம். ஏழையாகவும் இருக்கலாம். ஒருவர் பணக்காரராக இருப்பதால், ஏழையரின் உள்ளத்தைக்கொண்டிருக்க முடியாது என்றில்லை. அதேபோல, ஒருவர் ஏழையாக இருப்பதால், ஏழையரின் உள்ளத்தைக் கொண்டிருப்பார் எனவும், கூற முடியாது.
அப்படிப்பட்ட ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றவர்கள் என, இந்த நற்செய்தி நமக்கு கூறுகிறது. பேறுபெற்றவர்கள் என்பதன் பொருள், பேரானந்தம், பேரின்பத்தைப் பெற்றவர்கள் என்று பொருள். அவர்களுக்கு, வேறு ஒன்றுமே இந்த உலகத்தில் தேவையில்லை. இறைவனை முழுமையாகப் பற்றிக்கொண்டு வாழும்போது நம் வாழ்வில் இத்தகைய பேரானந்தத்தைப் பெற்றுக்கொள்கிறோம். அத்தகைய பேரின்பத்தைப்பெற இறைவனிடம் மன்றாடுவோம்.
– அருட்பணி. தாமஸ் ரோஜர்