ஏழைகளுக்கு முன்னுரிமை
உறவுகளின் நெருக்கம் குறைந்து, விரிசல் அதிகமாகிக் கொண்டிருக்கிற உலகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கு உறவுகளுக்கு முக்கியத்துவம் இல்லை. பணக்கார உறவென்றால், தாங்கிப்பிடிக்கிறோம். அவர்களின் வீட்டில் ஒன்று என்றாலும், நாம் ஓடுகிறோம். ஆனால், ஏழைகள், எளியவர்கள் நமது உறவு என்று சொல்வதற்கே, வெட்கப்படுகிறோம். அவர்களை ஒதுக்கிவைக்கிறோம். அப்படித்தான், இந்த உலகம் நமக்கும், நம் சந்ததியினருக்கும் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறது. இதிலிருந்து மீண்டு வர நமக்கு அழைப்புவிடுப்பதுதான், இன்றைய நற்செய்தியில் வரும், இயேசுவின் வார்த்தைகள்.
இயேசு எளியோரை, வறியோரை, ஏழைகளை வாழ்வில் முன்னேற்றுவதற்கு அழைப்புவிடுக்கின்றார். லூக்கா நற்செய்தியாளருக்கே உள்ள தனிப்பாணியில் இந்த செய்தி மையப்படுத்தப்படுகிறது. ஏன் ஏழைகள் மையப்படுத்தப்பட வேண்டும்? ஏன் அவர்களுக்கு உதவுவதில் நாம் அதிக அக்கறை கொள்ள வேண்டும்? ஏனென்றால், நாம் செய்யக்கூடிய உதவி, கைம்மாறு கருதாமல் செய்யப்பட வேண்டிய ஒன்றாக இருக்க வேண்டும். உதவி என்பது எதிர்பார்த்து செய்யப்படுவதாக இருக்கக்கூடாது. தேவையை கருத்தில்கொண்டு, எதையும் எதிர்பாராமல் செய்யக்கூடிய உதவியாக இருக்க வேண்டும். அதனை நாம் ஏழைகளுக்குச் செய்கிறபோதுதான், பெறமுடியும். எனவே தான், இயேசு இந்த அறிவுரையை நமக்குத் தருகிறார்.
நமது வாழ்வில் ஏழைகளுக்கு உதவி செய்வதற்கு முன்னுரிமை கொடுக்கிறோமா? அவர்களை முதன்மைப்படுத்துகிறோமா? அவர்களது வாழ்வில் ஒளியேற்ற முயற்சி எடுக்கிறோமா? ஏழைகளுக்கு உதவிசெய்கிறபோது, கடவுளுக்கே கடன் கொடுக்கிறோம். அதனை நமது உள்ளத்தில் பதித்து நமது வாழ்வை அமைத்துக்கொள்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்