ஏழைகளாய் வாழ்வோம்
ஒரு யூதக்குடும்பத்தில் ஆண்குழந்தை பிறக்கின்றபோது, ஒருசில சடங்குகளை நிறைவேற்ற வேண்டியிருந்தது. முதலில், குழந்தை பிறந்த எட்டாம் நாள் அதற்கு விருத்தசேதன சடங்குகளை நிறைவேற்ற வேண்டும்(லேவியர்12: 3). இரண்டாவது, தலைப்பேறு ஆண்குழந்தைகள் அனைத்தும் ஆண்டவருக்குரியது. விடுதலைப்பயணம் 13: 2 ல் பார்க்கிறோம்: “தலைப்பேறு அனைத்தையும் எனக்கு அர்ப்பணம் செய்: இஸ்ரயேல் மக்களிடையே மனிதரிலும் கால்நடைகளிலும் கருப்பையைத்திறக்கும் எல்லாத் தலைப்பேறும் எனக்குரியவை”. இதற்கான காரணம்: எகிப்தில் பார்வோன் மன்னனின் கடின உள்ளத்தின் பொருட்டு அனைத்து ஆண் தலைப்பேறுகளும் இறந்துபோயினர். ஆனால், ஆண்டவர் இஸ்ரயேல் மக்களின் ஆண் மகன்களைக் காப்பாற்றினார். எனவே, எல்லாத்தலைப்பேறுகளையும் இறைவன் தனக்கெனத் தேர்ந்துகொண்டார். அவர்கள் கடவுளுக்கு உரியவர்களாயினர். அவர்களை மீட்பதற்கும் சடங்குகளை வகுத்திருந்தனர். எண்ணிக்கை 18: 15 – 16 “மனிதராயினும் விலங்காயினும் முதலில் கருப்பை திறக்கும் அனைத்திலும் அவர்கள் ஆண்டவருக்குப்படைக்கின்ற ஒவ்வொன்றும் உன்னுடையது. ஆயினும் மனிதரில் தலைப்பேறானவனை நீ மீட்டுக்கொள்வாய். அவற்றின் மீட்புத்தொகை ஐந்து வெள்ளிக்காசுகள்”(ஒரு மாதக்கூலிக்கு சமம்). மூன்றாவது, தூய்மைச்சடங்;கு. லேவியர் 12 ல் பார்க்கிறோம்: ஆண் குழந்தையைப்பெற்றெடுத்த பெண்ணைத் தூய்மைப்படுத்துகின்ற சடங்கு அங்கே தரப்பட்டுள்ளது. 40 நாட்களுக்குள்ளாக தூய தலத்திற்கு வரக்கூடாது. தூய்மையடையும் காலக்கெடுவிற்குப்பின்னர் ஓராண்டு நிறைவுற்ற செம்மறி ஆடு ஒன்றையோ, முடியாதவர்கள் இரண்டு காட்டுப்புறாக்களையோ கொண்டு வந்து பலியாக செலுத்த வேண்டும்.
இங்கே நற்செய்தியில் காணப்படுகிற பகுதியில் இயேசுவுக்கு விருத்தசேதனம் செய்தாகி விட்டது. மற்ற இரண்டு சடங்குகளையும் நிறைவேற்றுவதற்காக, அதாவது, தலைப்பேறு ஆண் குழந்தையான இயேசுவை ஆண்டவருக்கு அர்ப்பணம் செய்து மீட்கும் சடங்கையும், மரியாளுக்கு தூய்மைச்சடங்கை நிறைவேற்றவும் அவர்கள் எருசலேம் ஆலயத்திற்கு வந்திருந்தார்கள். இயேசுவின் பெற்றோர் காணிக்கையாகக்கொடுத்தது இரு புறாக்கள் என்று நற்செய்தி சொல்கிறது. அதாவது, ஏழைகளின் காணிக்கை இந்த புறாக்கள். கடவுள் தன்னை ஏழைகளோடும், எளியவர்களோடும் ஐக்கியப்படுத்திக்கொண்டார் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த நிகழ்ச்சி.
ஏழைகள் என்பவர்கள் வெறுமனே பணமோ, பொருளோ இல்லாதவர்கள் என்ற அர்த்தமல்ல: மாறாக, யாரெல்லாம் கடவுள் மீது தங்களின் முழுமையான நம்பிக்கையை வைக்கிறார்களோ, அவர்கள் தான் விவிலியத்தில் ஏழைகள் என்று குறிப்பிடப்டுகிறவர்கள். திருக்குடும்பம் கடவுள் மீது தங்களின் முழுமையான நம்பிக்கையை வைத்திருந்தது. நாமும் இறைவன் மீது முழுமையான நம்பிக்கை வைத்து ஏழைகளாய் வாழ்வோம். நிறைவான வாழ்வு வாழ்வோம்.
~அருட்பணி. தாமஸ் ரோஜர்.