ஏமாறாதீர்கள் !
ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். இயேசுவின் காலத்திலும் நானே மெசியா, நானே விடுதலை தருபவர், காலம் நெருங்கிவிட்டது என்று சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றியவர்கள் பலர் இருந்தனர். இயேசு அவர்களைப் பற்றி எச்சரித்தார். அவர்கள் பின்னே போகாதீர்கள். ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் எச்சரிக்கிறார்.
ஆனால், அன்றிலிருந்து இன்று வரை ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள், ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்று இயேசுவின் பெயரால், அற்புதங்கள். அருங்குறிகள் செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு, மக்களை ஏமாற்றும் கூட்டம் பெருகிக்கொண்டே இருக்கிறது. ஏமாறும் மக்களின் கூட்டமும் பெருகத்தான் செய்கிறது. ஏன் இந்த நிலை? அருங்குறிகளிலும், அடையாளங்களிலும் மக்களுக்கு இருக்கும் அதிகபட்ச ஆர்வம்தான் இந்த ஏமாற்றலுக்குக் காரணம். அருங்குறிகள் தேடாமல், இறைவார்த்தையின்படி வாழும் ஆர்வத்தை ஏன் நாம் மக்களுக்கு வழங்கக்கூடாது. அற்புதங்களை நாடாமல், நேர்மையாக, மாதிரியாக வாழ்கின்ற முறையை விவிலியத்திலிருந்து கற்றுக்கொள்வோம். யாரும் நம்மை ஏமாற்றாதவாறு விழிப்புடன் வாழ்வோம்.
மன்றாடுவோம்: நிறைவாழ்வு தரும் ஊற்றான இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். வியத்தகு செயல்களை வான்வெளியிலும், இயற்கையிலும் காணும நான், உம்மை வியப்புக்குரியவர் எனப்போற்றுகிறேன். அருங்குறிகளைத் தேடி ஓடாமல், ஏமாறாதபடி விழிப்பாயிருக்கும் அருளை எனக்குத் தந்தருளும். உமது தூய ஆவியால் என்னை நிரப்பும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
~~ அருள்தந்தை குமார்ராஜா